காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அண்ணா சமாதி வரை பேரணியாகச் சென்று கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று, இதுவரை எங்களுக்கு வந்திருக்கின்ற கணக்கின்படி, ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஆங்காங்கு இருக்கின்ற மண்டபங்களில், பொது இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

மேலும் அவர், ”இந்தப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருக்கிறது. ஆனால், ஒரு சிலர், குறிப்பாக சில ஊடகங்கள் ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது போல வேண்டுமென்றே ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை.” என்றார்.

பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது கறுப்பு கொடி காட்டும் போராட்டம் குறித்து, வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதை எந்தவிதத்தில் செயல்படுத்துவது என விவாதித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்