”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?

0
98

Net Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன?

இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.

வலைத்தள சமவாய்ப்புக்கு இப்போது என்ன அச்சுறுத்தல்?

வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை, மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை, மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.

இந்தப் பாகுபாடு யாரையெல்லாம் பாதிக்கும்?

எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னையின் அடிப்படை என்ன?

தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணைய/வலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க, அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் (எஃப்.சி.சி) 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்