PM CARES : நரேந்திர மோடியின் 10,000 கோடி ரூபாய் கொரோனா ரகசியம்

0
255

கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் உருவாக்கப்பட்ட ஒரு நிதி அமைப்பு வெளிப்படைத்தன்மை அற்றதாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டுக்கும், சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது என்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து மார்ச் மாத இறுதியில் சமூக பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், மார்ச் 27ஆம் தேதி, பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி என்ற நிதியத்தை உண்டாக்கினார். சுருக்கமாக பி.எம். கேர்ஸ். (PM Cares)

இந்தியர்கள் அனைவரும் இதற்கு நிதியளிக்க வேண்டும் என அதற்கு அடுத்தநாள் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அவர் பகிர்ந்த ட்வீட்டில், “பி.எம் கேர்ஸ் நிதியத்துக்கு நிதியளியுங்கள். இது என் சக இந்தியர்களுக்கான கோரிக்கை,” என்று கூறி இருந்தார். மேலும் அவர், “ இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளவும் இந்த நிதியானது உதவியாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பல தரப்பிலிருந்தும், அதாவது பிரபலமான மனிதர்கள், நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சாமன்ய மனிதர்களிடமிருந்து ஏராளமான நிதி குவிந்தது. ஒரே வாரத்தில், 65 பில்லியன் (6500 கோடி) ரூபாய் வரை இந்த நிதி குவிந்தது. இப்போது 100 பில்லியன் (10,000 கோடி) ரூபாய் வரை இந்த நிதி குவிந்திருக்குமென நம்பப்படுகிறது.

பி.எம்.கேர்ஸ் நிதி சர்ச்சை

தொடக்கத்திலிருந்தே இந்த பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக பல சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஏற்கெனவே, அதாவது 1948 ஆம் ஆண்டிலிருந்தே பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF) என ஒன்று இருக்கும் போது, இப்போது ஏன் இந்த புது அமைப்பு என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பி.எம். கேர்ஸ் மூலமாக பெறப்பட்ட நிதி, பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு (PMNRF) அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கேள்விகளுக்கான எந்த பதிலும் பி.எம் கேர்ஸ் இணையதளத்தில் இல்லை. பிரதமர் அலுவலகமும் இது தொடர்பாக தகவல்கள் அளிக்க மறுக்கிறது.

இதன் காரணமாக இப்போது எதிர்க்கட்சிகள், செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் அரசு எதனையாவது மறைக்கப் பார்க்கிறதா என கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பான மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும், நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதிய விஷயத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென அந்த மனுக்கள் கோரின. ஆனால், பி.எம் கேர்ஸ் அமைப்பு பொது அமைப்பு அல்ல. அதனால், இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தணிக்கையாளர்களால் இந்த நிதியை தணிக்கையும் செய்ய முடியாது.

பி.எம் கேர்ஸ் நிதி அமைப்பானது பொது அமைப்பு அல்ல என்று சொல்வது அபத்தம் என்று பிபிசியிடம் கூறினார் சட்ட மாணவரான கண்டுகுரி ஶ்ரீ ஹர்ஷ்.

பிரதமரின் பெயரை சொல்லி இந்த நிதி பெறப்பட்டு இருக்கிறது. இதற்கு நிதியளித்த லட்சக்கணக்கான மக்களுக்கு இது தனியார் அறக்கட்டளை என தெரியாது என்கிறார் அவர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த பி.எம் கேர்ஸ் நிதி குறித்து தகவல் கோரியவர்களில் கண்டுகுரியும் ஒருவர். ஏப்ரல் 1ஆம் தேதி, பிஎம் கேர்ஸ் எப்படி இயங்குகிறது என தகவல் கோரி இருந்தார்.

ஏன் இந்த நிதியம் பொது அமைப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து பல வாதங்களை முன் வைக்கிறார்.

  • இது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரதமர் இதன் தலைவராக இருக்கிறார். அமைச்சரவையில் உள்ள மூன்று அறங்காவலர்கள், பிரதமரால் நியமிக்கப்படும் மூன்று பேர் என ஆறு பேர் இதன் அறங்காவலர்கள்.
  • பி.எம் கேர்ஸ்க்கு “gov.in” என்ற டொமைன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் தேசிய சின்னம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்த அரசுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
  • இதற்கு அரசு பிரதிநிதிகள் பெருமளவில் நிதியளித்து இருக்கிறார்கள். தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் நிதியளிக்க பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரப்பட்டனர். அரசு ஊழியர்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை தர கட்டாயப்படுத்தப்பட்டனர்.

“ஏன் அரசு பதிலளிக்க மறுக்கிறது. இதில் என்ன மறைக்க இருக்கிறது,” என கேள்வி எழுப்புகிறார் கண்டுகுரி.

முன்னாள் பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமான சாகேத் கோகலே, “இது அரசின் தோல்வி, அப்பட்டமான மோசடி,” என்கிறார்.

இந்த நிதியில் எந்த முறைகேடும் இல்லை என்கின்றனர் பா.ஜ.கவினர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி, “மிகவும் குறைவு, மிகவும் தாமதம்” என குற்றஞ்சாட்டப்பட்டது. வென்டிலேட்டர்கள் வாங்கியதும் சர்ச்சையானது.

“வென்டிலேட்டர்களுக்காக எந்த ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்படவில்லை. இது நியாயமற்றது,” என்கிறார் கோகலே.

பி.எம்.கேர்ஸ் மூலமாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் வென்டிலேட்டர்களின் தரம் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் கேள்வி எழுப்பினர்.

தணிக்கையும், பா.ஜ.க தொடர்பும்

இந்த நிதி குறித்து தணிக்கை செய்ய நியமிக்கப்பட்டுள்ள சார்க் எனும் தனியார் நிறுவனம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார். 2018ஆம் ஆண்டு PMNRF நிதியை தணிக்கை செய்ய எந்த ஒப்பந்தப்புள்ளிகளும் கோராமல் இந்த தனியார் நிறுவனம் தன்னிச்சையாகப் பிரதமரால் நியமிக்கப்பட்டது என்று கூறுகிறார் கோகலே.

“இந்த நிறுவனத்தின் தலைவர் குப்தா. இவர் பா.ஜ.கவின் அனுதாபி, மேக் இன் இந்தியா குறித்து புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் 20 மில்லியன் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதியத்துக்குக் கொடை அளித்துள்ளார். இதுதான் இந்த நிறுவனம் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது ,” என்கிறார்.

இது குறித்து குப்தாவிடம் பிபிசி கேள்வி எழுப்பியது, பா.ஜ.கவுக்கும் அவருக்குமான தொடர்பின் காரணமாகத்தான் அவரது நிறுவனத்துக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதா என கேட்கப்பட்டது. ஆனால், இதற்கு பதில் கூற அவர் மறுத்துவிட்டார்.

பா.ஜ.க கூறுவது என்ன?

பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், பொதுவாக PMNRF நிதி இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளத்தான் பயன்படுத்தப்படுகிறது. பெருந்தொற்றுகளை எதிர்க்கொள்ளதான் இந்த சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் PMNRF அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் அதன் அறங்காவலர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள்தான் என்கிறார்.

இந்தியாவில் பல கட்சிகள் உள்ளன. ஏன் ஒருகட்சியை மட்டும் பொது நிதியை கையாளும் விஷயத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்.

மோதியும் பிற அமைச்சர்களும் பி.எம் கேர்ஸ் அமைப்பில் இருப்பதற்கு காரணம், அவர்கள் வகிக்கும் பதவிகளுக்காகத்தான், அவர்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்பதற்காக அல்ல என்கிறார்.

இந்த நிதி குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறதே என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுக்கிறார். குப்தாவின் சார்க் நிறுவனம் நியமிக்கப்பட்டதற்கு முழுமையான காரணம் அவர்களின் தகுதியின் அடிப்படையில்தான்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் குறித்து பேசும் அவர், “பி.எம்.கேர்ஸ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு. எல்லாரும் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் பரபரப்பாக இருக்கும் போது, இப்போதே இந்த குறித்து பொதுவில் பேச என்ன அவசரம்,” என கேள்வி எழுப்புகிறார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேந்தர் ஹோடா.

சட்டப்படி அவர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட பிறகுதான் நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று கூறியப் பின் அவர் தனது மனுவை திரும்பப் பெற்றிருக்கிறார்.

எவ்வளவு நிதி கொடையாக பெறப்பட்டது, எதற்காக செலவிடப்பட்டது, யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதை பொது தளத்தில் அவர்கள் வெளியிட வேண்டும். சட்டத்தின ஆட்சியின் அடிப்படை கொள்கை வெளிப்படைத்தன்மைதான்,” என்கிறார் அவர்.

 https://www.bbc.com/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here