#OvercomeOckhi: புதிய சொந்தங்கள்

”ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்”

1
1180

50 நாட்களுக்கு முன்பு….

“ஏசப்பான்னு” சொல்லி அவன் தண்ணில தாந்து போனான்; ஜன்னலைத் திறந்தாலே அந்தச் சத்தம் கேட்கிறது என்று அந்த ஆவணப் படத்தில் ஒக்கி புயல் பேரிடரில் உயிர் தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தபோது முதல் முறையாக கில்பர்ட் ராஜ் அந்த உயிர்களுக்காக அழுதார்; சில சமயங்களில் உண்மைகள் நம்மை வந்து சேர்வதில்லை; உண்மைகள் வந்து சேரும்போது நாம் தொடப்படுகிறோம்.

ஒரு மாதத்திற்கு முன்பு…..

நீரோடியின் ஆக்னஸ் மேரிக்கும் மார்த்தாண்டம்துறையின் கிறிஸ்து ராஜாவுக்கும் ஒரு விஷயம் பொதுவானதாக இருந்தது; தங்களைப்போல ஒக்கி புயல் பேரிடரில் சொந்தங்களை இழந்த எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று இருவருமே விரும்பினார்கள்; அதனால்தான் தூத்தூர் செயின்ட் ஜூட் கல்லூரிக்கு மத்திய அரசின் குழு இழப்பீட்டுக் கணக்கெடுப்புக்காக வந்தபோது இருவருமே வந்திருந்தார்கள். “அரசு அதிகாரிகள் மீது படுகொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று கோபாவேசத்துடன் சத்தமிட்டார் கிறிஸ்து ராஜா. அங்கு வந்திருந்த எல்லா பாதிரியார்களிடமும் இளைஞர்கள் மிகவும் கோபத்துடன் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியார்கள் செவிகளைத் தாழ்த்தி, குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பு……

மனநல ஆலோசகர் ஆனந்தி கார்த்திக் அந்தத் தேவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தார்; வேகமாக அங்கு வந்த ஒருவர், “அம்மா, நீங்கள் நிறையபேரைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து கேள்விப்பட்டேன்; இந்தப் பையனை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்று அவரை அழைத்துச் செல்கிறார். வந்து நான்கு நாட்கள்தான் மக்களோடு செலவிட்டிருக்கிறோம்; அதற்குள் குணப்படுத்துகிறோம் என்று மக்களின் வாய் வழியாக கேட்பதெல்லாம் பெரிய வரம் என்கிறார் ஆனந்தி. மனநல ஆலோசகர் சவும்யா சந்தித்த அந்த 22 வயது இளம் ஒக்கி விதவை முதல் மூன்று நாட்கள் எதுவும் பேசவில்லை; நான்காவது நாள், அவரே சவும்யாவை அழைத்துப் பேசினார். “உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

ஒக்கி புயல் பேரிடரில் சிக்கி கடலில் நீந்தி தப்பி வந்தவர்களில் சிலரைச் சந்திக்க சென்ற முதல் நபராக தான் இருந்தது மனநல ஆலோசகர் சாந்தி ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது; ”ஆண்களை இழந்த குடும்பங்களைச் சந்திக்க கொஞ்சம்பேராவது வந்திருக்கிறார்கள்; ஆனால் உயிர் தப்பி வந்தவர்களைச் சந்திக்க வெகு சிலரே வந்திருக்கிறார்கள்” என்று சாந்தி ராவ் கூறினார். கடலுக்குத் திரும்பச் செல்வதற்கு அச்சமிருந்தாலும் வேறு வாழ்வாதாரத்துக்குப் பழகாததால் மீண்டும் கடலுக்குச் செல்கிறார்கள் தப்பி வந்தவர்கள்.

“பெரும்பாலான குழந்தைகள் தங்களது அப்பாக்கள் திரும்ப வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்; கணவனை இழந்த துயரத்தைவிட அதனை இந்தக் குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது என்பதே பல தாய்மார்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது” என்கிறார் மனநல ஆலோசகர் திவ்யா; தூக்கமின்மையும் தற்கொலை எண்ணங்களும் வழக்கமானவையாக இருக்கின்றன. அப்பா புயலிலிருந்து தப்பிக்க ஏதோ ஒரு தீவில் ஒதுங்கியிருக்கிறார் என்பது போன்று கடல் காற்றில் வேகமாக பரவி வரும் வதந்திகளைக் குழந்தைகள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

இரண்டு மாதங்களாக தேவாலயம் மூலமாக வருகிற அரிசி, மீன் ஆகியவற்றை மட்டும் கொண்டு நாட்களைக் கடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமானதாக இருக்கிறது. சில பெந்தகோஸ்தே மதப் பிரச்சாரகர்கள், பிரார்த்தனைகள் மூலமாக காணாமல் போனவர்களை மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை உருவாக்கி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மட்டுமே காணாமல் போனவருக்குத் தெரியும் என்பதால் அந்தப் போனில் மட்டும் எப்போதும் சார்ஜ் இருப்பதுபோல வைத்துக் கொள்கிறது ஒரு குடும்பம்.

#OvercomeOckhi சமூக-மன ஆதரவு முயற்சியின் வழிகாட்டியான எழுத்தாளரும் பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின், கடலோரச் சமூகத்தைப் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தியதும் 11 மனநல ஆலோசகர்களில் பலருக்கும் ”இது ரொம்பவே கடினமான வேலையாக இருக்கும்; நம்மால் முடியுமா?” என்று உதறல் எடுத்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் லோபிதாஸும் அவர் ஒருங்கிணைத்த உள்ளூர் தன்னார்வலர்களும் மூடுண்ட அந்தச் சமூகத்தின் புதிர்களைப் புரிந்துகொள்ள ஒத்தாசையாக இருந்தார்கள். அறியப்படாத முகங்களுக்குத் தோள் கொடுக்க வீடு வீடாக 11 மனநல ஆலோசகர்களும் நடந்தார்கள்.

துயரம் தாளாமல் பதினைந்து நிமிடங்களாக ஒரு பெண் அழுதபோது தன்னார்வலர்களும் அழுதார்கள்; முதல் சந்திப்பில் புதிய உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென்று சென்ற மனநல ஆலோசகர்களுக்கு மாபெரும் மானுட அனுபவத்தைச் சொந்தங்களை இழந்த மக்கள் தந்திருக்கிறார்கள். தாம் நேசித்த சொந்தங்கள் இப்போது தங்களுடன் இல்லை என்பதை இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாத மக்கள், இன்னமும் எங்கோ அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்று கடலோரம் முழுக்க சோகம் அப்பியிருக்கிறது.

“மீண்டும் மக்களை இயல்பான வாழ்வுக்குத் திரும்பச் செய்வதற்கு தொடர்ந்து அவர்களோடு பேச வேண்டும்; நீண்ட இடைவெளிகள் கூடாது” என்கிறார் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி வரும் முனைவர் வாசுகி மதிவாணன். இந்த முயற்சியின் மூலமாக கடலோரச் சமூகத்தில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படுகிறது என்பதை உறுதியாக நம்புகிறார் வறீதையா கான்ஸ்தந்தின். ”கண்காணா மக்களுக்கு நடந்த கண்காணா பேரிடர்” என்று இவரால் வர்ணிக்கப்பட்டது ஒக்கி புயல் பேரிடர்; பாதிக்கப்பட்ட பெண்களின் கண்கள் வழியே இந்தப் பேரிடரைப் பாருங்கள் என்கிற அவருடைய அறைகூவலுக்கு இப்போது சில செவிகள் மெல்ல தாழ்கின்றன.

#OvercomeOckhi முயற்சியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இதைப் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

1 COMMENT

Comments are closed.