Operation Lotus – ஐ மக்களுக்கு நினைவுபடுத்திய குமாரசுவாமி

0
281

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் (மஜத) எம்எல்ஏக்களை பாஜக தன்பக்கம் இழுக்க ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக கூறி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸும் (78 இடங்கள் ) , மஜத (38 இடங்கள் )வும் இணைந்து
ஆட்சியை பிடிக்க ஒருபுறம் முயன்றுவருகின்றனர். மறுபுறம் , 103 இடங்களை பெற்ற பாஜக ஆட்சியை பிடிக்க முயன்றுவருகின்றனர்.

கர்நாடக பாஜக தலைவர்களும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 103 இடங்களைப் பெற்ற பாஜக வுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 9 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ், மஜத கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று காலை (புதன்கிழமை) நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 12 பேரைக் காணவில்லை. அதேபோல, மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மஜத தலைவர் குமாரசுவாமி

மாநிலத்தில் பெரும்பான்மை உள்ள மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியில் ஆளுநரைச் சந்தித்துள்ளோம். மணிப்பூர், கோவாவில் பெரும்பான்மை இல்லாமல், பாஜக ஆட்சி அமைத்தது. அதேபோன்ற முயற்சிகளை பாஜக இங்கும் செய்ய முயல்கிறது. இதற்காக எங்கள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர் .

பாஜக வுக்கு ரூ.100 கோடி கறுப்புப் பணம் எங்கிருந்து வந்தது?. ஏழைகளுக்கு சேவை செய்கிறவர்களுக்கு இவ்வளவு
பணம் எப்படி வந்தது. வருமானவரித்துறையினர் எங்கு சென்றார்கள்?. என்றும் கேள்வி எழுப்பினார்.

எனக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இருதரப்பில் இருந்தும் அழைப்புகள் வந்தன. கடந்த 2004-05 ஆண்டுகளில் நான் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்ததால் எனது தந்தையின் பொது வாழ்கையில் கரும்புள்ளி ஏற்பட்டது. தற்போது அதை அழிக்கும் அரிய வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார். எனவே நான் காங்கிரஸுடன் முழுமனதாக கூட்டணி ஏற்படுத்தியுள்ளேன்.

வடக்கிலிருந்து பாஜக அசுவமேத யாத்திரை நடத்தி வருகிறது. தற்போது அந்த குதிரைகள் கர்நாடகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அந்த அசுவமேத யாத்திரையை நிறுத்துவதே இந்த கூட்டணியின் இறுதித் தீர்ப்பு.

பாஜக-வில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைய பலர் தயாராக உள்ளனர். எனவே பாஜக எங்களிடம் இருந்து ஒன்றை திருடினால், நாங்கள் அதற்கு இரட்டிப்பாக பதிலடி தருவோம். குதிரை பேரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் எந்தவகையான
முடிவையும் எடுக்காதீர்கள் என ஆளுநரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

மக்கள் Operation Lotus – ஐ மறந்திருந்தால் , அனைவருக்கும் அதைப்பற்றி நினைவூட்ட விரும்புகிறேன்.
Operation Lotus என்பது 2008 இல் பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜக வாங்கியது . எடியூரப்பாவின் 2008 -2013 ஆட்சிகாலத்தில் , எதிர்க்கட்சி எம் எல் ஏக்களை பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி விலைக்கு வாங்கி அவர்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை இடைத்தேர்தலில் போட்டியிட வைத்தார் .

இதையும் பாருங்கள்: சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்!

இதையும் பாருங்கள்: வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி? நமக்குப் பிடித்த வேலைகள் எப்போது கிடைக்கும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்