மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (National Eligibility and Entrance Test – NEET) இந்தாண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த இத்தேர்வில் 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

neet

இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

highcourt

இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் காலம் கடத்தாமல் விரைவில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

supremecourt

இதனையடுத்து தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்றும், சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ”உதயச்சந்திரனால் தமிழ் நாடு அரசுக்குத்தான் நல்ல பெயர்”: சவுக்கு சங்கர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்