#MTCBus: இந்தப் பேருந்தின் லட்சணத்தைப் பாருங்கள்

Look at the pathetic condition of driver seats in Metropolitan Transport Corporation (MTC) buses

0
337
கம்பியாலும் கயிறாலும் காப்பாற்றப்பட்டுள்ள ஓட்டுநர் இருக்கை

இந்தப் படத்தை உற்றுப் பாருங்கள்; ஓட்டுநரின் இருக்கையின் மேல் பகுதி முறுக்குக் கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது; கீழ் பகுதி சணல் கயிறால் கட்டப்பட்டுள்ளது. இந்தப் படம் சென்னையில் ஜூன் 13 (செவ்வாய்க்கிழமை) மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 12ஆம் எண் பேருந்தில் எடுக்கப்பட்டது. படம் எடுக்கப்பட்டபோது காலையில் 11.44 மணி; வெயில் அனலாக தகித்துக் கொண்டிருந்தது; சென்னை சில்க்ஸ் தீ விபத்து காரணமாக இரண்டு வாரங்களாக தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதால் பேருந்து புறப்பட்ட தியாகராய நகரில் கடும் நெரிசல். இந்தப் படத்துக்கு என்ன? ஓட்டுநரின் இருக்கையை இறுக்கிக் கட்டி வைத்திருப்பது நல்லதுதானே? இப்படியெல்லாம் உங்கள் மனதில் தோன்றினால் மேலே படியுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னை சில்க்ஸ் தீ: 16 நாட்களாக வேலையிழந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு 2012இல் ஜூன் 27 (புதன் கிழமை) அன்று சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையிலிருந்து வந்த 17எம் மாநகரகப் போக்குவரத்துக் கழகப் பேருந்து பக்கவாட்டுச் சுவரை உடைத்துவிட்டு தலைகீழாக கவிழ்ந்தது; 30 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது; இந்தப் பேருந்தின் ஓட்டுநர் பிரசாத் உட்கார்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்ததால்தான் விபத்து ஏற்பட்டது. பணிமனைகளில் பேருந்துகளை ஓட்டுநர்களிடம் ஒப்படைக்கும் முன்பு பழுது நீக்கித் தருவதில்லை என்ற உண்மைதான் இந்தச் சம்பவத்தில் அம்பலமானது. “விபத்தில்லா தமிழ்நாட்டை” உருவாக்க வேண்டுமென்ற இப்போது டாட் காமின் செய்திகளில் முதலாவதாக வந்த செய்தியில் பணிமனைகள் எப்படி விபத்துகளின் பிறப்பிடமாக இருக்கின்றன என்பதை ஆதம்பாக்கம் பணிமனையின் நிர்வாகச் சீர்கேட்டை அடிப்படையாக வைத்து வெளியிட்டிருந்தோம்.

மீண்டும் அண்ணா சாலையில் பஸ் கவிழ்ந்த சம்பவத்துக்கு வருவோம்; விடிஐ 615 என்ற குறியீட்டெண் கொண்ட அந்தப் பேருந்து அண்ணா சாலை விபத்துக்கு முன்பு சுமார் 15 முறை விபத்துக்குள்ளாகியிருக்கிறது; பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானதே இதில் கணிசமான சம்பவங்கள்; ஒரு முறை மின் கம்பத்திலும் இன்னொரு முறை ஒரு டாடா இண்டிகா வாகனத்திலும் மோதியுள்ளது. இந்த விவரங்களை இப்போதுவுக்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து சொல்கிறோம். பணிமனைகளிலுள்ள பொறுப்பாளர்கள், கிளை மேலாளர்கள் பேருந்துகளைப் பழுது இல்லாத நிலையில் ஓட்டுநர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது. முறையான பராமரிப்பு இல்லாமல், போதுமான உதிரி பாகங்கள் இல்லாமல் பொதுப் போக்குவரத்து சேவை சீர்கெட்டுப் போனால் ஏழை, எளிய மக்கள்தான் மிகப்பெரும் கஷ்டங்களுக்கு ஆளாவார்கள்.

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

“வாங்கப்படுகிற சில புதிய உதிரி பாகங்கள் தரமற்றதாக இருக்கின்றன; காலாவதியான பேருந்துகளிலிருந்து உதிரி பாகங்களைக் கழட்டி எடுத்து மாட்டுகிற பழக்கமும் இருக்கிறது” என்கிறார் நேதாஜி அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன். டயரில் காற்று இறங்குவது, கண்ணாடியில் உண்டாகும் இயல்பான பழுதுகள் போன்றவற்றுக்கும் ஓட்டுநர்களையே பொறுப்பாக்கும் புதிய நடைமுறையையும் அன்பழகன் கண்டிக்கிறார். பணிமனைகளில் பேருந்துகளின் நிலைமை பற்றிய குறிப்பேடுகள் பராமரிக்கப்படுகின்றன; இதில் ஓட்டுநர்கள் தாங்கள் அடையாளம் காணும் பிரச்சினைகளையும் குறித்து வைக்கலாம்; ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற கவனம் பணிமனைப் பொறுப்பாளர்களிடம் இருக்கிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்