மீ2 இயக்கத்தில் குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்களின் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. என்றோ நடந்த தவறை இப்போது பெரிதுப்படுத்துகிறார்கள்… தவறு நடந்த போதே ஏன் சொல்லவில்லை… இவர்கள் என்ன உத்தமிகளா… என்பது போல் பல்வேறு கேள்விகள், வசைகள். ஒரு குற்றச்சாட்டின் மூலம் ஒருவரது வாழ்நாள் இமேஜை உடைத்துவிட முடியும், அதனால், யோசித்து குற்றச்சாட்டை முன் வையுங்கள் என்ற கரிசனத்துடன் கூடிய அறிவுரைகளும் இதில் அடங்கும். அனைத்தையும் கடந்து, மீ2 இயக்கம், பெண்கள் மீது அத்துமீறி கைவைத்தால் அது ஆபத்தில் முடியும் என்ற அச்சத்தை பிரபல ஆண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. மீ2 இயக்கத்துக்கு முன்பு பெண்களிடம் இயல்பாக அத்துமீறிய ஆண் மனதுகள் மீ2 க்குப் பிறகு அந்த இயல்பை இழந்து எச்சரிக்கை அடைந்துள்ளன. இது மீ2 இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும்.

ஆனால், குறுகிய காலத்திலேயே இந்த வெற்றியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. துவேசங்களால் முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாதது ஆகியன மீ2 இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன.

பொய்யான குற்றச்சாட்டுகள் எனும் போது, எது பொய், எது உண்மை என்று யார் தீர்மானிப்பது? இங்கே பொய்யான குற்றச்சாட்டு என்பது, ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டு, வெகுமக்களால் உடனடியாக பொய் என்று நிராகரிப்புக்கு உள்ளாவது. அந்தவகை குற்றச்சாட்டை இந்தி நடிகை ராக்கி சாவந்த் வைத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் படப்பிடிப்புதளத்தில் நானா படேகர் என்னிடம் அத்துமீறினார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா சொன்ன குற்றச்சாட்டே இந்தியாவில் மீ2 ஹேஷ்டேகை பிரபலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ தத்தா ஒரு தவறான பெண் என்று விமர்சித்தார் நடிகை ராக்கி சாவந்த். தனுஸ்ரீ தத்தா ராக்கி சாவந்த் மீது 10 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார் ராக்கி சாவந்த். தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அவர் ஒரு பார்ட்டியின் போது என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார், தனது தோழிகளுடன் கூட்டு லெஸ்பியன் உறவுக்கு என்னை வற்புறுத்தினார். நான் மறுக்கவே, தனது நண்பர்களை வைத்து என்னை வன்புணர்வு செய்வதாக மிரட்டினார். தனுஸ்ரீ தத்தா 10 கோடி ரூபாய் கேட்டு வழக்கு போட்டால் நான் 50 கோடி கேட்பேன் என்று ராக்கி சாவந்த் கூறினார். பிரபலத்துக்காக எதை வேண்டுமானாலும் கூறக் கூடியவர் ராக்கி சாவந்த் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். ராக்கி சாவந்தின் வார்த்தைகளிலிருந்தே அவரது குற்றச்சாட்டின் உண்மை நிலை புரிந்துவிடும். ராக்கி சாவந்த் ஏன் யாரும் நம்ப இயலாத குற்றச்சாட்டுகளை தனுஸ்ரீ மீது சுமத்துகிறார்?

மீ2 இயக்கத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும்பாலானவற்றை குற்றம்சாட்டியவர்களால் நிரூபிக்க முடியாது. நானா படேகர் மீதான குற்றச்சாட்டை தனுஸ்ரீ தத்தாவால் இன்று நிரூபிப்பது கடினம். குற்றச்சாட்டு சொன்னால் போதும், அதனை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அல்லது நிரூபிக்க முடிகிற குற்றச்சாட்டை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்ற விதி மீ2 வில் இல்லை. அந்த சௌகரியத்தை ராக்கி சாவந்த் பயன்படுத்திக் கொள்கிறார். தனுஸ்ரீ ஒரு லெஸ்பியனா, அவர் ராக்கி சாவந்தை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தாரா என்பது உள்பட எந்த குற்றச்சாட்டையும் ராக்கி சாவந்த் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவரைப் போல் இன்னும் சிலர் இதேபோல் போலி குற்றச்சாட்டுகளை சொல்லும் போது, மீ2 வில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை பலவீனப்படும்.

நிபுணன் படப்பிடிப்பின் போது அர்ஜுன் தேவையில்லாமல் உரசி, என்மீது விரல்களை படரவிட்டார் என்பது ஸ்ருதி ஹரிகரனின் குற்றச்சாட்டு. அதனை மறுத்த அர்ஜுன், ஸ்ருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜுன் அத்துமீறி தனது உடம்பில் விரல்களை படரவிட்டார் என்பதை இப்போது ஸ்ருதி ஹரிகரன் நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். என்றோ படப்பிடிப்பு தளத்தில் ரகசியமாக ஒருவர் செய்த அத்துமீறலை இன்று எப்படி அவரால் நிரூபிக்க முடியும்? ஒருவேளை நிரூபிக்க முடியாமல் போய் நீதிமன்றம் ஸ்ருதி ஹரிகரன் மீது நடவடிக்கை எடுத்தால் என்னாகும்? நானா படேகர், வைரமுத்து, தியாகராஜன், சுசி கணேசன் என அனைவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் நிரூபிப்பதற்கு சிரமமானவை. இவர்களும் கோர்ட்டுக்கு போய், குற்றம் சுமத்தியவர்களால் அதனை நிரூபிக்க முடியாமல் போனால், இவர்கள் குற்றமற்றவர்கள் என அர்த்தமாகுமா?

மீ2 இயக்கம் சட்டத்துக்கு வெளியே இயங்கும் ஓர் இயக்கம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் அரிய வெளி. குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற தைரியத்தில் ராக்கி சாவந்த் போன்றவர்கள் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளும், குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்ற தைரியத்தில் ஆண்களால் போடப்படும் மான நஷ்ட வழக்குகளும் மீ2 இயக்கத்தை அச்சுறுத்தும் இரு காரணிகளாக எழுந்து நிற்கின்றன.

மீ2 குற்றச்சாட்டை சட்டத்துக்கு அப்பார்ப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து அணுகுகிற நேர்மையான மனம் நமது சமூகத்துக்கு அமைய வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்