metoo ஹேஷ்டேக் இந்திய சினிமாவின் பெருந்தலைகளை புழுதியில் புரட்டிக் கொண்டிருக்கிறது. எந்த மினரல் வாட்டர் கொண்டு கழுவினாலும் புழுதியின் மிச்சம் பெருந்தலைகளில் இனி காலத்துக்கும் ஒட்டிக் கொண்டிருக்கும். பிரபலமாக இருக்கும் பெண்களை படுக்கைக்கு என்றில்லை, காபி குடிப்பதற்கே அழைக்க ஆண்கள் இனி யோசிப்பார்கள் என்பது இந்த metoo இயக்கத்தின் வெற்றி.

metoo இயக்கத்தின் ஒரே குறை குற்றம்சாட்டுகிறவர், குற்றச்சாட்டுக்குள்ளாகிறவர்… இந்த இரண்டு பேரில் ஒருவராவது பிரபலமாக இருக்க வேண்டியிருக்கிறது. பிரபலமாக இருந்தால் மட்டுமே அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு மீடியா வெளிச்சம் கிடைக்கிறது. நீங்கள் பிரபலமாக இல்லாதபட்சத்தில் நீங்கள் குற்றம்சாட்டுகிறவராவது பிரபலமாக இருந்தாக வேண்டும். சாமானிய ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் சாமானிய பெண்கள் மத்தியில் metoo இன்னும் ஊடுருவாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

metoo இயக்கத்தின் வெற்றிக்கு சம்பந்தப்பட்டவர்களின் பிரபலமே முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு இந்தி நடிகை, ரயிலில் பயணம் செய்கையில் ஒருவன் தன்னைப் பார்த்து சுயஇன்பம் செய்ததாகவும், அவனை கன்னத்தில் அறைந்து துரத்தியதாகவும் கூறியிருந்தார். நடிகையின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். அந்த முகம் தெரியாத நபர் யார் என்று அறிய ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. அவன் கோடான கோடி முகம் தெரியாதவர்களில் ஒருவன். அதேநேரம், அந்த நடிகை, தன்னைப் பார்த்து சுயஇன்பம் செய்த நபர் ஒரு நடிகர், பாடகர், பெரிய பிசினஸ்மேன், அரசியல்வாதி என்று பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தாலும் வெகுஜனங்கள் மத்தியில் ஒரு க்யூரியாசிட்டி தோன்றியிருக்கும். அது யார் என்று கேள்விமேல் கேள்வி கேட்டிருப்பார்கள். அனைத்து மீடியாக்களும் புலானாய்வை துரிதப்படுத்தியிருக்கும். ஆனால், ஒரு சாமானிய பெண் ஒரு சாமானிய ஆண் மீது குற்றச்சாட்டை வைக்கும் போது இவை எதுவும் நடப்பதில்லை.

metoo வில் குற்றம்சாட்டப்படுகிறவர்களுக்கு எதிராக நீதிமன்றம் கேட்கும் சாலிட் எவிடென்ஸ் பெரும்பாலும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகள் வழக்காகி, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறி. அப்படியிருந்தும் ஏன் அதிகளவில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன? ஏன் பிரபலமான பெண்கள் – நாம் சொல்லும் குற்றச்சாட்டை நம்மால் நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையிலும் – தொடர்ந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை முன்வைக்கிறார்கள்?

பிரபலமான பெண் தன்மீது நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து இன்னொரு பிரபலம் மீது குற்றச்சாட்டை வைக்கும் போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரது புகழ் உடனடியாக அடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை முற்றிலுமாக வடிந்துவிடுகிறது. ஐம்பது வருடங்களாக ஒருவர் சிறுகச் சிறுக கட்டி உயர்த்திய சமூக மதிப்பீட்டை ஒரே குற்றச்சாட்டின் மூலம் தகர்த்துவிட முடியும். குற்றச்சாட்டு கோர்ட்டுக்கு போய் குற்றம் நிரூபிக்கப்பட்டுதான் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில்லை. குற்றச்சாட்டு வைப்பதன் மூலமே சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்க முடியும். அவரது இமேஜை அடித்து காலி செய்ய முடியும். அதுக்கு தேவை குற்றச்சாட்டை முன் வைக்கும் தைரியம் மட்டுமே.

குற்றம்சாட்டுகிறவர், குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறவர் இருவருமே பிரபலமாக இல்லாதபட்சத்தில் இந்த ‘கேரக்டர் அசாசின்’ பொதுவெளியில் நடக்க வாய்ப்பில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளாகிற சாமானிய ஆண் தனது மதிப்பீடு குறித்து கவலையில்லாதவனாக இருந்தால், சமூகத்தில் பாதிப்புக்குள்ளாவது குற்றம்சாட்டுகிற அந்த சாமானிய பெண்ணாகவே இருப்பார். இதன் காரணமாகவே metoo சாமானிய பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரபலமான நடிகைகளே தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை துணிச்சலாக முன் வைக்கிறார்கள். நாம் வைத்தால் என்ன என்று சாமானிய பெண்களும் துணிச்சல் பெற்றால் அது metoo ஏற்படுத்திய ஆரோக்கியமான பாதிப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here