கல்விப் புலங்களில் அதிகாரம் மிக்க ஆண்கள் பெண்களிடம் அத்துமீறிய பட்டியலை இந்தியாவில் பிறந்து கலிஃபோர்னியாவில் வாழும் வழக்குரைஞர் ரயா ஸ்டீயர் தொகுத்திருந்தார்; நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தியாளர் ரயாவிடம் பேசியபோது ரயா தனக்குத் தனிப்பட்ட முறையில் பாலியல் கொடுமைகள் நடக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் சில தினங்களிலேயே தனக்குப் பாலியல் கொடுமைகள் நடந்திருக்கின்றன என்று ரயா சொன்னார். நான் இதைப் பற்றி ரயாவிடம் கேட்டபோது, மற்ற பெண்கள் தைரியமாக வாக்குமூலங்களை அளித்தபோது தனது கதையைச் சொல்வதற்கான ஊக்கம் கிடைத்தது என்பதை ஒப்புக்கொண்டார். நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன் என்பதைப் பேசுவதற்கு சக மனுஷிகளும் பேச வேண்டியிருந்தது என்பதை ரயா சொன்னது ஓர் உண்மையான தருணம்.

அதிகாரத்தின் முன்பு பலவீனமாக இருக்கிறவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேசுவதற்காக காத்திருக்க வேண்டும்; நம்பிக்கை தரும் சூழல் உருவாகும்வரை காத்திருக்க வேண்டும். இப்போது இவர்கள் பேச மாட்டார்கள் என்கிற இறுமாப்பில் அத்துமீறியவர்களுக்கு, இனி மேல் இந்த மவுனத்துக்கான உத்தரவாதம் இல்லை. ”என் இச்சைக்கு உடன்படாவிட்டால் உனக்கு வேலை இருக்காது; என் இச்சைக்கு இணங்காவிட்டால் நீ முனைவர் பட்டம் பெற முடியாது” என்று அதிகாரத்தில் திளைத்தவர்களை நடுங்க வைத்திருக்கிறது #நானும் (#மிடூ) இயக்கம். எளிய பின்னணியிலிருந்து வந்து ஏற்றம் பெற்ற வைரமுத்து, “உடன் வந்து படுக்காவிட்டால் உன் வேலைக்கு உலை வைத்துவிடுவேன்” என்று மிரட்டியதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். சன் தொலைக்காட்சியில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருந்த ரமேஷ் பிரபா தன்னிடம் 13 வயதில் அத்துமீறியதாக பாடும் பெண் ஒருவர் சொல்கிறார்.

சென்னை மியூசிக் அகாடமியின் கமிட்டியில் இடம்பெற்றிருந்த பப்பு வேணுகோபால் ராவ், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் பேராசிரியாக இருந்த சதான்ந்த் மேனன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் பதவி இழந்திருக்கிறார்கள். மத்திய அமைச்சராக இருக்கும் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் தங்களிடம் அத்துமீறியதை பல பெண் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்; விளம்பரத் துறையில், சினிமாவில், ஊடகங்களில் நிகழ்ந்த அதிகார துஷ்பிரயோகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த அத்துமீறல்களைப் பற்றிப் பேசுவதே இவற்றைத் தடுப்பதற்கான தொடக்கப் புள்ளி.

ஜிஷாவும் அம்பேத்கரும்

நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here