LIVE : கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை தொடங்கியது

0
218

உடல்நலம் குன்றிய நிலையில் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , 11வது நாளாக சிகிச்சையில் இருந்த போது காலமானார்.

11.55 PM: வழக்கறிஞர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “5 வழக்குகள் உள்ளதால், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என்பதை ஏற்க முடியாது. கருணாநதிக்கு மெரினாவில் இடம் வேண்டும். எனவே, நான் தொடுத்த நான்கு வழக்குகள் மற்றும் பாமகவின் பாலு தொடர்ந்த வழக்கு என மொத்தம் 5 வழக்கும் வாபஸ் பெறப்படுகிறது. நாங்கள் தொடுத்த வழக்கை காரணம் காட்டி தான், தமிழக அரசு மெரினாவில் இடமளிக்க அனுமதி மறுத்தது. நாங்கள் எங்கள் வழக்குகளை வாபஸ் பெறுகிறோம். எனவே, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை” என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

11.40 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை தொடங்கியது

11.35 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

11. 30 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

11.15 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை, ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் ,மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி வீட்டின் முன்பு, திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணைக்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறி, போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11.04 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

10.55 PM: நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

10.55 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்கு நாம் செய்யும் மரியாதை, கடமை’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10.41 PM: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ‘ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

10.35 PM : சென்னை மெரினா கடற்கரையில் யாரையும் அடக்கம் செய்யக் கூடாது என பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்து இந்த வழக்கை தாமாக முன் வந்து வாபஸ் வாங்கிக் கொண்டார்.

10.25 PM : கலைஞரின் உடல் ஏந்திய ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது.

10.20 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, நாளை (8.8.18) நடப்பதாக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

10.15 PM : திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி நாடு முழுவதும் நாளை ஒருநாள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10.05 PM : மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய இடம் ஒதுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த், கி.வீரமணி, ராமதாஸ், திருநாவுக்கரசர், வைகோ, விஜயகாந்த், பாலகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், வேண்டுகோள்

09.45 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கர்நாடாகாவில் நாளை விடுமுறை அறிவிப்பு

09.45 PM : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்து சேர்ந்தார்.

09.30 PM : அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கருணாநிதி மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

09.20 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷிடம் திமுக மனு அளித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

09.05 PM: காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

08.50 PM: ‘மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்து நெருப்போடு விளையாடாதீர்கள்’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

08.45 PM: சென்னை காவேரி மருத்துவமனை வளாகத்தில் தடியடி. மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய, இடம் ஒதுக்கக் கோரி திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் .

08.35 PM: தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

08.15 PM: மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்திருக்கும் நிலையில், மீண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது என ஸ்டாலின் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

08. 10 PM: பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடல் இரவு 08.30 மணி முதல் நள்ளிரவு 01:00 வரை கோபாலபுரம் இல்லத்திலும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை சி.ஐ.டி. காலனி இல்ல வீட்டிலும், பின்னர் அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலிலும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:05 PM: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், “அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. பல சட்ட சிக்கல் இருக்கும் காரணமாக அங்கு இடம் ஒதுக்க முடியாது. கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கிறது” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

07:55 PM: செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “அண்ணா சமாதி அருகே, கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து பதில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

07:50 PM: மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தனது டிவிட்டரில், இந்தியா தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கும், மு.க.ஸ்டாலின், கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். கருணாநிதியின் இழப்பை எண்ணி இந்தியா வருந்துகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

07:45 : திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘‘மிகச்சிறந்த தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு ஆளானேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.

07:41 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், தமிழக மக்களால் அதிகம் விரும்பப்பட்டவரும், தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக நீண்ட பயணத்தையும், அழியாத் அடையாளத்தையும் கொண்ட பேருருவம் கருணாநிதி. அவரின் மறைவால், இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது. அனைவராலும் விரும்பப்படும் மிகச்சிறந்த தலைவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

07:30 PM: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பையொட்டி, 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

07:15 PM: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது டிவிட்டரில், “ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து இருக்கும் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கு வலிமையை தர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:15 PM: ரஜினிகாந்த் தனது டிவிட்டரில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

07:10 PM: 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். கருணாநிதியின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு என தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:00 PM: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டரில், “திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

06: 55 PM: ‘இந்தியாவின் மாபெரும் தலைவரை இழந்துவிட்டோம்’ என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

06.50 PM: கருணாநிதி காலமானார் என்ற அறிவிப்பை தொடர்ந்து, காவேரி மருத்துவமனை முன்பு இருந்த தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர்.

06: 40 PM: திமுக தலைவர் கருணாநிதி மாலை 06.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

21

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்