#JusticeForJisha: ஜிஷாவும் அம்பேத்கரும்

0
317

(மே 9ஆம் தேதி (2016) அண்ணல் அம்பேத்கரின் முதல் ஆய்வுக் கட்டுரையின் நூறாண்டுகள் நிறைவடைந்தது; அதன் நினைவாக வெளியான கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)

ஜிஷாவின் வீடு சின்னதொரு குடிசை; கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகமான புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர்; சட்டம் படித்து தன்னைப்போன்ற தலித் மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார் ஜிஷா. கணவனால் கைவிடப்பட்ட அவருடைய ஏழைத் தாய் ராஜேஸ்வரி கூலிக்கு வேலைகள் செய்து ஜிஷாவை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். பெரும்பாவூருக்கு அருகிலுள்ள ராயமங்கலம் பஞ்சாயத்தில் வாழ்ந்த இந்தக் குடும்பத்துக்கு ஒரு கல்வீடு கட்டித்தர யாரும் உதவவில்லை; தங்களுக்குப் பாலியல் தொந்தரவு இருக்கிறது என்று சொல்லப்பட்ட ஜிஷாவின் முந்தைய புகார்கள் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஜிஷாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை பற்றி காவல் துறை மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கொடுக்கவில்லை.

ஐந்து நாட்களாக ஜிஷாவின் பாலியல் பலாத்காரமும் மரணமும் போலீஸையோ, ராயமங்கலத்தின் கம்யூனிஸ்ட் ஆளும் வர்க்கத்தையோ சிறிதளவும் அசைத்துப் பார்க்கவில்லை; சுதந்திரமான மக்கள் அமைப்புகளும் தேசிய ஊடகங்களும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தபோதும் அது ஊரில் ஒதுக்கப்படுதலைப் பற்றிய பிரச்சனையாக வெளிப்படுத்தப்படவில்லை; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எழுத்தறிவு மிக்க கேரளத்தில் தமிழ்நாட்டைப்போல 242 சதவீதம் என்பதுபோன்ற புள்ளி விவரங்கள் பேசப்பட்டன. இந்தப் பிரச்சனை பேசப்பட்டதற்கு மக்களின் நீதிக்கான வேட்கையும் சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணமாக அமைந்தன. புலம்பெயர் தொழிலாளிகள் ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று சில மலையாள ஊடகங்கள் தங்களது வெறுப்பு அரசியலைப் பரப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

ஜிஷா கதறியபோது கதவைத் தாழிட்டுக்கொண்டிருந்த ராயமங்கலம் ஊர் மக்களிடம் தலித்துகளின் அபயக்குரலைக் கேட்க முடியாதபடி ஜாதி மனம் மேலோங்கியிருந்தது; ஜிஷா பாதுகாப்புக்காக ஓடி வந்து கதவைத் தட்டாதபடி ஜாதிக் கதவுகள் இறுக்க அடைக்கப்பட்டிருந்தன. நூறு வருஷங்களுக்கு முன்பு இதே நாளில் (மே 9) அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எழுதிய முதல் கட்டுரையின் சொற்கள் ஜிஷாவுக்கும் ராஜேஸ்வரிக்கும் அந்த வியாழக்கிழமை இரவில் உண்மையாக இருந்தன; இது ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஒதுக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையாக இருக்கக்கூடாது; ஜனநாயகத்தை கடைசி மனிதருக்கும் மனுஷிக்கும் உண்மையாக்க வேண்டிய பயணம் நீண்ட நெடியது; ஒவ்வொரு ஊரையும் எல்லோருக்கும் பாதுகாப்பானதாக மாற்றும் அந்தப் பயணத்தை விரைவுபடுத்துவோம்.

இதையும் படியுங்கள்:
நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழிப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்