முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திங்கள்கிழமை சிறையில் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தொலைக்காட்சி நிறுவனமான ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு நிதியை பெற்று தந்தது தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த செப்.5ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நமது அரசினுடைய அமைப்பில், ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும், ஒருங்கிணைந்த முடிவுகள்தான். அரசின் 6 செயலர்கள் உட்பட மொத்தம் 12 அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகுதான் அதை முன்மொழிந்துள்ளனர். ஒருமித்த பரிந்துரைகளின் பேரில் அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முடிவை பரிந்துரைத்த அந்த அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் அவர்களின் பரிந்துரைக்கு வெறும் ஒப்புதல் அளித்த அமைச்சர் மீது மட்டும் எவ்வாறு குற்றம் சுமத்த முடியும். இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஒரு பரிந்துரையை அங்கீகரிப்பதற்கு அமைச்சர் பொறுப்பேற்றால் அரசாங்க கட்டமைப்பு சரிந்துவிடும்
இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டும் என்று நாங்கள் மிகுந்த மன உறுதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.