இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மொகாலியில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் முதலே, இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 115ஆக இருந்தபோது, ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார். அவர், 67 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர், நிதானமாக ஆடி 88 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார்.

ro1

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, அவுட்டாகாமல் நிலைத்து நின்று 208 ரன்கள் எடுத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். ரோஹித் ஷர்மா, கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 208 ரன்களும், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்களும் எடுத்திருந்தார். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, 153 பந்துகளில் 208 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியைத் தழுவியது.

முன்னதாக, தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்