சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான இறுதிப்போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஸார் அலி மற்றும் ஃபஹர் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 128ஆக இருந்தபோது அஸார் அலி அவுட்டாகி வெளியேறினார். அவர், 71 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து களமிறங்கிய பாபர் அஸாம், ஃபஹர் ஜமானுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபஹர் ஜமான் 114 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, முஹம்மது ஹாஃபிஸ் 57 ரன்களும், பாபர் அஸாம் 46 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் புவனேஷ் குமார், ஹர்திக் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணியின் பூஜ்யமாக இருந்தநிலையில், ரோஹித் ஷர்மா, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது அமிரின் பந்தில் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.

அதனையடுத்து விராத் கோலியும் ஐந்து ரன்கள் எடுத்தநிலையில் முஹம்மது அமிரின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஷிகர் தவாண் 21 ரன்களுடனும், தோனி நான்கு ரன்களுடனும், ஜாதவ் ஒன்பது ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர். ஸ்கோர் 72ஆக இருந்தபோது ஆறு விக்கெட்டை இழந்து இந்திய அணியின் தடுமாறியது. இந்ந்லையில் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டையாவும் 76 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இதில் ஆறு சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியில் முஹம்மது அமீர், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதையும் படியுங்கள்: லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்