இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு ரன்னில் ஒரு விக்கெட்டை இழந்தது வங்கதேசம். ரன் எதுவும் எடுக்காமல் சர்க்கார் அவுட்டாகி வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய சபீர் ரகுமான் 19 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகி வெளியேறினார். வங்கதேச அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 70 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அவரைத்தொடர்ந்து முஷிஃபிகுர் ரகுமான் 85 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் புவனேஷ் குமார், பும்ரா, ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். இதில் 129 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து விராத் கோலி, 78 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 40.1 ஓவர்களில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதையும் படியுங்கள் : விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்