டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கை குழந்தைகளுடன் பெண்கள், மாணவிகள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவிந்துள்ளதாக ஒரு புகைப்படம் ஒன்று வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் நம்பகத்தன்மையை ஆராயும் பணியை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் உண்மை கண்டறியும் குழு மேற்கொண்டது.
பிரபு சாகர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அந்த ஒளிப்படத்தை, இந்தியில் விவரித்து பதிவு செய்துள்ளார். அதில் போராட்டம் நடந்து வரும் டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் இது. உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் கமெண்ட் செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்.
அந்த ஒளிப்படம் இன்டர்நெட்டில் முதன் முதலாக எப்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் என ஆராய்ந்ததில், அந்த ஒளிப்படம் 4 வருட பழைமையானது என தெரிந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு baomoi.com என்ற செய்தி இணையதளம் அந்த ஒளிப்படத்தை குறித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் ஆண்கள் மட்டும் தங்கியுள்ள குடியிருப்பின் கழிவு நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆணுறைகள் எனவும்,தனிமையில் இப்படித்தான் வாழ்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த ஒளிப்படத்தை ஷாஹின் பாக் பகுதியில் நடந்து வரும் போராட்ட களத்தில் இருப்பதாக அந்த நபர் பொய் செய்தியை பரப்பியுள்ளார். அந்த பதிவு நெட்டிசன்களால் 1,600 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த செய்தி பொய்யான செய்தி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கூறுகிறது .