மீண்டும் பிரபலமாகி இருக்கிறது ஃபேஸ் ஆப் செயலி.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் இப்படி இருப்பேன், என் முக அமைப்பு இவ்வாறாக இருக்குமென பலர் மிக உற்சாகமாக ஃபேஸ்ஆப் செயலி மூலம் மாற்றி அமைக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முழுவதும் அப்படி பகிரப்பட்ட படங்கள் நிரம்பி வழிகின்றன.

ஆனால், ஃபேஸ்ஆப் செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலே கைபேசியில் உள்ள புகைப்பட லைப்ரரி தரவுகளை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘மீண்டும் சர்ச்சை’

இவ்வாறான குற்றச்சாட்டு எழுவது இது முதல்முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல சர்ச்சையில் சிக்கியது ஃபேஸ்ஆப்.

யாரோஸ்லாஃப் காண்ட்ஷராஃப் நிறுவிய ரஷ்ய நிறுவனமான ‘வைர்லெஸ் லேப்’ வடிவமைத்த செயலிதான் ஃபேஸ்ஆப்.

2017ம் ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தபோதே, பயனர்களின் தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர வழிவகை செய்கிறது இந்த செயலியின் தனியுரிமை கொள்கை (பிரைவஸி பாலிஸி) என அப்போதே பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இப்போது இந்த செயலி மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக முதுமையில் பயனாளிகளின் முகம் எவ்வாறாக இருக்குமென இந்த புதிய பதிப்பில் பார்க்க முடியும்.

ஆனால், செயலியின் அப்டேட் வந்த சில மணி நேரங்களிலேயே, செயலி குறித்த எதிர்மறை விஷயங்களும் பரவத் தொடங்கின.

இந்த செயலி நமது அனுமதி இல்லாமலேயே புகைப்படங்களை எடுக்கிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

தொழில் நுட்ப செய்தியாளர் ஸ்காட் பட்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது அந்தரங்க தகவல்களை ஃபேஸ்ஆப் செயலி எடுக்கிறது” என்ற தொனியில் ஒரு ட்வீட்டை பகிர்ந்திருந்தார்.

அதன்பின் பலர் இவ்வாறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் அமெரிக்க தேர்தலை முன்னிட்டே ரஷ்ய நிறுவனம் பயனர்களின் தகவல்களை திருடுகிறது என்ற தொனியில் சிலர் ட்வீட் செய்து இருக்கிறார்கள்.

மறுக்கும் வல்லுநர்கள்

ஃபேஸ் ஆப்-க்கு எதிரான குற்றச்சாட்டுகளை பல தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகள் பிழையானவை என்கிறார் பிரபல ஹாக்கர் இலியட் ஆண்டர்சன். ஃபேஸ் ஆப் இவ்வாறாக பயனர்களின் அனுமதி இல்லாமல் அனைத்து புகைப்படங்களையும் எடுக்கவில்லை என்று தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கி இருக்கிறார்.

அதுபோல, கார்டியன் ஐஓஎஸ் ஆப் நிறுவனரான வில் ஸ்டராஃபாக்கும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். அவர் ஃபேஸ் ஆப் இவ்வாறான செயல்களில் இறங்கவில்லை என்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ள அவர், “நான் ஆய்வு செய்து பார்த்ததில் ஃபேஸ் ஆப், மொபைல் கேமிரா ரோலில் இருந்து அனைத்து படங்களையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கும் தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி, “நாம் ஒரு செயலியை கைபேசியில் ஏற்றும் போது, அவர்கள் சொல்லும் எந்த விதிமுறைகளையும் படிக்காமல் அதற்கு அனுமதி தருகிறோம். நமது தனிப்பட்ட தரவுகளை அவர்கள் பயன்படுத்தி கொள்வது உட்பட பல சிக்கலான நிபந்தனைகளை விதித்து இருப்பார்கள். அதை புரிந்து கொள்ளமல் நாம் அந்த செயலியை தரவேற்றம் செய்கிறோம். அதாவது, நமது தகவல்களை எடுக்க நாமே அனுமதி தருகிறோம். தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மூலம் மட்டுமே நமது அந்தரங்க தகவல்களை காக்க முடியும் ” என்கிறார் அவர்.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here