முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் வீட்டிற்கு சென்று ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெறுமாறு ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே வி சௌத்ரி வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையம் அலோக் வர்மாவுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணையை மேற்பார்வைச் செய்யும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது .ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே வி சௌத்ரி ஜன்பத் சாலையில் இருக்கும் அலோக் வர்மாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ‘நீங்கள் இவ்வாறு செய்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறியதாக ஏ.கே.பட்நாயக் தி வயர் (The Wire) தளத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புப் பற்றிய விரிவான தகவல்களை அலோக் வர்மா நீதிபதி பட்நாயக்கிடம் எழுத்தில் அளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரி , நிலக்கரி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் குல்பே பற்றிய விசாரணையை துவங்க இருந்தபோது முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது . இந்த விசாரணை நடக்கக்கூடாது என்று ராகேஷ் அஸ்தானா விரும்பியிருக்கிறார். இதனால் அலோக் வர்மா ராகேஷ் அஸ்தானா மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டிதான் சௌத்ரி அலோக் வர்மாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையம் அலோக் வர்மா மீது வைத்த குற்றச்சாட்டுகள் முழுவதும் ராகேஷ் அஸ்தானாவின் குற்றச்சாட்டுகளே. அக்குற்றச்சாட்டுகளை காரணமாக வைத்தே அலோக் வர்மாவை பணியிலிருந்து நீக்கினர்.

வர்மா லஞ்சம் வாங்கியதாக சொல்லப்பட்டப் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அலோக் வர்மா விஷயத்தில் பிரதமர் மோடி அமைத்த குழுவின் நடவடிக்கை சரியான முடிவல்ல என்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையில் நான் கண்டறிந்தக் கருத்துகள் எதுவும் இல்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி தன்னை வந்து சந்தித்த விவரங்களை நீதிபதி பட்நாய்க்கிடம் அலோக் வர்மா எழுத்தில் சமர்பித்துள்ளார். ராகேஷ் அஸ்தானாவின் ஆண்டு ரகசிய அறிக்கையில், அலோக் வர்மா எதிர்மறை விமர்சனத்தை எழுதியிருந்தார். அதாவது ‘சந்தேகத்துக்குரியவர்’ என்று குறிப்பிட்டிருந்தார் . அதை நீக்குமாறும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி அலோக் வர்மாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அவ்வாறு குறிப்பிட்டிருப்பது ராகேஷ் அஸ்தானா உயர்பதவிகளுக்கு செல்ல தடையாக இருக்கும். சிபிஐ இயக்குநர் மாதிரியான பதவிகளுக்கு மிகவும் தடையாக இருக்கும்.

இந்த எதிர்மறைக் கருத்தை அலோக் வர்மா திரும்ப பெறாத காரணத்தால் ராகேஷ் அஸ்தானா ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அலோக் வர்மா பற்றி ஊழல் குற்றச்சட்டுக்களை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் அலோக் வர்மாவை பணியிலிருந்து துரத்தியது .

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது பிரதமர் மோடி அமைத்த குழுவின் நடவடிக்கை சரியான முடிவல்ல என்றும் மிகவும் அவசரமான முடிவு என்றும் நீதிபதி பட்நாயக் தெரிவித்திருந்தார்.

நீதிபதி பட்நாயக்கின் கூற்றுப்படி பார்த்தால் அஸ்தானா மீது சிபிஐயில் 6 விசாரணைகள் நிலுவையில் இருக்கிறது .

ராகேஷ் அஸ்தானாவுக்காக ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி அலோக் வர்மாவை சந்தித்திருப்பது, இவர் தலைமையிலான ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுகிறது .

ராகேஷ் அஸ்தானாவுக்காக அலோக் வர்மாவை சந்திக்கக் கூறி ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியிடம் யார் பரிந்துரை செய்தார்கள் என்பது தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருப்போர் மீதான குற்றச்சாட்டு வந்த போதெல்லாம் அரசாங்கத்தின் உயர்ந்த மட்டங்களில் இருப்போர் எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியும் .

ராகேஷ் அஸ்தானா விசயத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி சம்பந்தப்படுவது இது முதன்முறையல்ல . இதற்கு முன்னால் ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமித்த போது அலோக் வர்மா அதை எதிர்த்தார். அப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி தலையிட்டு ராகேஷ் அஸ்தானாவின் பதவியை உறுதி செய்தார். பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரி பி கே மிஸ்ரா ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியின் உதவியுடன் ராகேஷ் அஸ்தானாவை பதவியில் உட்கார வைத்தார்.

அக்டோபர் 2018 இல் சிபிஐ ராகேஷ் அஸ்தானா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது ஊழல் கண்காணிப்பு ஆணையம் பலக் குறைகளை கூறியது. எகனாமிக் டைம்ஸ் அளித்த செய்திபடி அதிகாரத்தில் இருப்பவரிடம் முன் ஒப்புதல் வாங்கிய பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று கூறியது . முன் ஒப்புதல் வாங்காத காரணத்தைக் கூறி அவர் மீது பதிந்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்தது .

பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.

கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.

அலோக் குமார் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை உயர்நிலைக் குழு முன் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார், மேலும், அவரை தண்டிக்காமல், அவருக்கு 77 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முடிவில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில் தேர்வுக் குழு என் தரப்பு நியாயங்களையோ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், நீதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் ராகேஷ் அஸ்தானா கொடுத்த குற்ற்ச்சாட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியும் சர்ச்சைக்கு உள்ளான அதிகாரியே. சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் பார்வையாளர்கள் டயரி ஊழலில் சௌத்ரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.ஊழல் கண்காணிப்பு ஆணையராக சௌத்ரி பதவியேற்ற பிறகு மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான தொழிலதிபர் நிகில் மர்ச்சென்ட் – ஐ சந்தித்தார்.

வருமான வரித்துறையினர் பிர்லா மற்றும் சஹாரா குழுமங்களில் கைப்பற்றிய ஆவணங்களில் குஜராத் முதலமைச்சர், மற்றும் பெரிய அதிகாரிகளின் (சௌத்ரி பெயரும் அடங்கும் ) பெயர்கள் இருந்தது .

Courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here