#Demonetization: 500, 1000 ஒழிப்பால் பசியால் வாடிய மலேசிய தமிழர் குடும்பம்

0
486

தமிழ்நாட்டைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் சென்னைக்குப் புறப்பட்டோம். நாங்கள் மலேசியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ்க் குடும்பம். எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர். என்னோட பேரு சந்திரன். என் மனைவி பேரு ஷியாமளா. எனக்கு இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள். நான் மலேசியாவில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகின்றேன்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே மலேசிய பணத்தைக் கொடுத்து இந்திய ரூபாயைப் பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டோம். இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்ததும் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தது பற்றி எங்களுக்குத் துளியும் தெரியாது. எங்களிடம் இருப்பது ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். சென்னைக்குச் சென்றதும் தியாகராய நகருக்குச் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் விமான நிலையத்திலிருந்து வாடகை கார் பிடித்து வெளியேறக்கூட எங்களால் முடியவில்லை. எங்களிடம் இருக்கும் பணத்தை வாங்கிக் கொள்ள அந்த வாடகை கார் டிரைவர்களும் மறுத்துவிட்டனர்.

அப்போதுதான் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மோடியின் அறிவிப்பு பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. நீங்கள் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால் வங்கிக்குச் சென்று ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டுங்கள். உங்களுக்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று அந்த டிரைவர் அறிவுறுத்தினார். ஆனால் அவ்வாறு எங்களால் செய்யவே முடியாது. ஏனென்றால் நாங்கள் மலேசிய குடிமக்கள். எங்களின் மூதாதையர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். அதன் பின் பல தலைமுறைகள் கடந்துவிட்டன. எங்களுக்குத் தமிழ் மொழி தெரியுமே தவிர நாங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களோ அல்லது இந்திய குடிமக்களோ கிடையாது என்பதை அந்தக் கார் டிரைவரிடம் தெளிவுபடுத்தினோம். அதன் பின் அந்த டாக்சி டிரைவர் எங்களுக்கு உதவ முன்வந்தார்.

ஆனால் ஒரு நிபந்தனை. மீனம்பாக்கத்திலிருந்து தியாகராய நகர் செல்ல கூடுதலாக பணம் கேட்டார். ஆயிரத்து ஐநூறு ரூபாயை அவர் கையில் கொடுத்து தியாகராய நகருக்கு வந்து சேர்ந்தோம். தி.நகரிலுள்ள கடைகளுக்குச் சென்று சில ஆடைகளைப் புதிதாக எடுத்துக்கொண்டு அதன் பின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் என்பது எங்கள் முடிவு. ஆனால் துணிக்கடைகளில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்ற விளம்பர நோட்டீஸ் கடையின் முகப்பிலேயே ஒட்டப்பட்டிருந்தது எங்களைச் சோர்வடையச் செய்தது. அதே நேரத்தில் ஒரு வகையான பதற்றமும் எங்களைத் தொற்றிக்கொண்டது.

நேரம் கடந்துகொண்டே இருக்கின்றது; மணி தற்போது பத்தாகிவிட்டது. எனது மகன்களும் மகள்களும் சாப்பிட வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு நான் உணவு வாங்கிக் கொடுத்தாக வேண்டும். அதற்கு முதலில் என்னிடமுள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றினால்தான் அதைச் செய்ய முடியும். குடும்பத்துடன் தெருவில் நிற்பதைப் பார்த்த துணிக்கடை ஊழியர் ஒருவர் அருகில் வந்து எங்களிடம் பேச்சு கொடுத்தார். விவரத்தை அவரிடம் சொன்னோம். அருகில்தான் ஸ்டேட் பேங்கு இருக்கிறது. அங்கே போய் மாற்றிக் கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார், நாங்கள் மலேசியத் தமிழர்கள் என்பதை அறியாமலேயே.

எனக்கு ஒரு குருட்டு நம்பிக்கை பிறந்தது. வங்கிக்கு முன்பு போய் நின்றால் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று? குடும்பத்துடன் அருகில் இருக்கக் கூடிய வங்கியை நோக்கி நடந்தோம். ஐந்தே நிமிடங்களில் நாங்கள் வங்கியைச் சென்றடைந்துவிட்டோம். மக்கள் கூட்டம் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றது. பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக. ஆண்களும் பெண்களுமாக கையில் ஆதார் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருக்கின்றார்கள்.
எனக்கு யாரையும் அங்கு தெரியாது. அவரவர்களின் தேவைக்காக வங்கி முன்பு நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி எனக்கு உதவி செய்வார்கள் என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். ஆனாலும் நான் யாரையாவது சந்தித்துப் பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலை. அப்போதுதான் என் குடும்பத்தினரைச் சாப்பிடவாவது வைக்க முடியும். வரிசையில் நிற்கும் இளைஞர் ஒருவரைச் சந்தித்துப் பணம் மாற்றுவதற்கான முறையை விசாரித்தவாறு பேச்சு கொடுத்தேன். ஆதார் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பியைக் காண்பித்தால் நீங்கள் நான்காயிரம் ரூபாய் வரையில் பழைய பணத்தைக் கொடுத்து புது ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் விளக்கமாக சொல்லி முடித்தார்.

தம்பி ஒரு சின்ன ஹெல்ப், என்கிட்ட ஆதார் அடையாள அட்டை கிடையாது என்று தொடங்கி மலேசிய பின்னணியைக் கூறினேன். வாய்ப்பு இருந்தா உங்களோட அட்டையப் பயன்படுத்தி எனக்குப் பணம் மாத்தித் தர முடியுமா என்றேன். ஒரு சில நொடிப்பொழுது யோசித்த அந்த இளைஞன் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் மாற்றித் தர ஒப்புக் கொண்டார். தான் வைத்துள்ள இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதாகவும், மீதி இரண்டாயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் மாற்றி தருவதாக உத்தரவாதம் அளித்த பின்னர்தான் எனக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. ஆனாலும் கூட்டத்தைப் பாக்கும்போது எனக்கு மிரட்சியாக இருந்தது. நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அந்த இளைஞரிடம் கொடுத்து விட்டேன். எப்போ இந்தக் கூட்டம் குறைந்து என் கைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வருவது என்று யோசித்தபடியே நின்று வங்கி ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஒருவரிடம் என்னுடைய சூழ்நிலை குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னேன். நீங்க பேங்க் மேனேஜரிடம் உங்க சூழ்நிலைய சொன்னீங்கனா ஏதாவது ஏற்பாடு செய்வார் என்று வழிகாட்டினார். அதன்படி பேங்க் மேனேஜரை சந்திப்பதற்காக வங்கிக்கு உள்ளே சென்றேன். உள்ளேயும் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அங்கும் பலர் பேங்க் மேனேஜரைச் சந்திப்பதற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக மேனேஜர் அறைக்குள் நான் சென்றுவிட்டேன். மீண்டும் ஒருமுறை அவரிடம் எனது மலேசிய பின்னணியைக் கூறி பணம் மாற்றித்தர ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டேன். அடுத்த நொடியே அவர் கை விரித்து விட்டார். ஆனாலும் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வதாகவும் குடியுரிமை இல்லாதவர்களுக்குத் தான் பணம் மாற்றிக் கொடுக்கக்கூடாது என்றும் சாதுவாக சொன்னார். வேண்டுமானால் ஒன்று செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள புதிய இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தார். சரி கொடுப்பதை ஏன் வேண்டாம் என்று சொல்வது, வாங்கிக் கொள்வோம் என்று நினைத்து நான் வைத்திருந்த பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகள் நான்கை அவரிடம் கொடுத்து மாற்றிக் கொண்டேன்.

ஏற்கனவே எனக்கு உதவுவதாக என்னிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயை வாங்கிச் சென்ற அந்த இளைஞர், பணத்தை மாற்றிய பின்பு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிய கையோடு முதலில் எனது குடும்பத்தினருக்குக் காலை உணவு வாங்கிக் கொடுத்தேன் பகல் பன்னிரண்டு மணிக்கு. இப்போது எனக்கு சில வழிகாட்டுதல்கள் கிடைத்திருக்கின்றன.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்திற்குச் சென்றால் வெளிநாட்டினராக இருந்தாலும் பணத்தை மாற்றிவிட முடியும் என்று பலர் அறிவுறுத்தினர். அதனால் குடும்பத்தினருடன் தற்போது ரிசர்வ் வங்கி நோக்கிச் செல்கிறேன் பணத்தை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையோடு என்றார் அந்த மலேசியவாழ் தமிழர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்