#Demonetisation: இந்த மாதிரி ஒரு பஞ்சத்த நான் பாத்ததே கிடையாது

மின்ட் ஸ்ட்ரீட் கதைகள்: ஒரு காலத்தில் பணம் அச்சடிக்கப்பட்ட இந்த சென்னைத் தெருவில் இப்போது பணத்தட்டுப்பாட்டால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

0
718
மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் ஏழை மக்களுக்குப் பஞ்சம் உருவாகியுள்ளது. படம் நன்றி: சுஷில் ஜோசப்

1841-42இல் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்களை உருவாக்கிய தெருதான் தங்கசாலை அல்லது மின்ட் தெரு; மோடி அரசின் 500, 1000 ஒழிப்பால் இந்தத் தெருவிற்கு வேலை தேடி வரும் மக்களுக்கு வேலைகள் இல்லை; இவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இவர்களே பேசுகிறார்கள். என்னோட பேரு பச்சையம்மா; கொருக்குப்பேட்டையிலதான் நாங்க குடியிருக்கோம். என் கணவர் என்ன விட்டுட்டுப் போய் பதினெட்டு வருஷம் ஆகுது. அதன் பிறகு என்னோட இரண்டு பிள்ளைகள நான் கட்டட வேல செஞ்சிதான் காப்பாத்தி வர்றேன். பொண்ண எப்படியோ கஷ்டப்பட்டுக் கட்டிக் கொடுத்துட்டேன். அது மின்ட்லதான் வாழுது. இப்போ பையன் மட்டும்தான் என்னோட இருக்கான். ஒண்ணாவதுல இருந்து அஞ்சாவது வரைக்கும் அவன் கொருக்குப்பேட்டையிலதான் படிச்சான். அதுக்கு அப்புறம் அவன ஆறாவதுக்கு மின்ட்ல இருக்குற கவர்மென்ட்டு ஸ்கூல்லதான் கொண்டாந்து சேத்தேன். வீட்டாண்ட இருக்குற (கொருக்குப்பேட்டை) பசங்களோட சேந்துதான் அவன் ஸ்கூலுக்குப் போயிகிட்டு இருந்தான். திடீர்னு அவன் நின்னுட்டான். காலையில எழுந்திருச்சி நான் வேலைக்குப் போனா மீண்டும் நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். அதனால அவன என்னால சரியா கவனிக்க முடியாம போயிடுச்சி. அதுக்கு அப்பறம் நானும் எவ்ளோ சொல்லிப் பாத்தேன்; அடிச்சும் பாத்தேன்; அவன் கேக்குற மாதிரியே இல்ல; சரி நானும் விட்டுட்டேன்.

அப்புறம் அம்பத்தூர்ல இருக்குற ஒரு மெக்கானிக் ஷாப்பில, பத்து வயசுல அவனே போய் வேலைக்குச் சேந்தான். ஏழு வருஷம் அந்தக் கடையில வேல செஞ்சான். ஒரு நாளைக்கு இருநூறு ரூபா அவனுக்குக் கூலி. எத்தன வருஷத்துக்குத்தான் அவனும் இருநூறு ரூபா கூலிக்கு வேல செய்வான். மெக்கானிக் வேல அவனுக்கு நல்லா தெரியும். கூலி கம்மியா இருக்குறதா சொல்லிக் கொஞ்சம் அதிகப்படுத்தி தரும்படி கேட்டான். அவங்க தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால அவன் அந்த வேலைய விட்டு நின்னு ஒரு வருஷம் ஆகுது. அம்மா கஷ்டப்படுறாங்களேன்னு சொல்லி அவனும் என்னோட சித்தாளு வேலைக்கு வருவான். ஒரு நாளைக்கு எனக்கு ஐநூறு ரூபா கூலி கெடைக்கும். அத வச்சித்தான், வீட்டு வாடகை, பொண்ணு கல்யாணச் செலவுக்கு வாங்கின தண்டல் காசு, சாப்பாடு எல்லாத்தையுமே பாத்துப்பேன். ஒரு வாரத்துல குறைஞ்சது நாலு நாளாவது எனக்கு வேல கிடைக்கும். மீந்தா என்னோட பொண்ணுக்கும் கொண்டு போய் கொடுப்பேன். இப்படித்தான் எங்க வாழ்க்கை ஏதோ நிம்மதியா போயிட்டு இருந்துச்சு.

இந்த ஐநூறு, ஆயிரம் ரூபா நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சதுல இருந்து எங்க நிம்மதி போயிடுச்சி. வாரத்துல ஒரு நாள்கூட வேல கிடைக்க மாட்டுது. இந்த இரண்டு மாசத்துல வெறும் ஐஞ்சு நாள்தான் வேல கிடைச்சுது. இத வச்சிகிட்டு நான் எப்பிடி குடும்பம் நடத்த முடியும்? வேல கிடைக்குதோ, இல்லையோ தினமும் காலையில எழுந்திருச்சி மின்ட் ஸ்டீரிட்டுக்கு வந்துடுவேன். என்ன மாதிரி நிறைய பொம்பளைங்க இங்க வேலைக்காக வருவாங்க. ஆனா இப்ப யாருமே வரது கிடையாது. எல்லாரும் வந்து வந்து பாத்துட்டு எத்தன நாளைக்குத்தான் சும்மா வீட்டுக்குப் போவாங்க? அதனால அவங்க வீட்லேயே இருக்குறாங்க. மத்த லேடீசுக்கு அவங்க வீட்டுகாரு துணை இருக்கு. எனக்கு எந்தத் துணையும் கிடையாது. அதனால நான் இங்க வந்துதான் ஆகணும். காலையில ஏழு, எட்டு மணிக்கெல்லாம் இங்க வந்துடுவேன். மதியம் பன்னிரெண்டு மணி வரைக்கும் பாப்பேன். அதுக்கு அப்புறம் நான் இங்க இருக்க மாட்டேன். பக்கத்துல இருக்குற ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போவேன். அங்க சாப்பாடு கொடுப்பாங்க. அத வாங்கி சாப்பிட்டுட்டு, கொஞ்சம் நேரம் அங்கவே இருப்பேன். அதுக்கு அப்பறம் நான் வீட்டுக்குக் கௌம்பிப் போயிடுவேன். என்னோட பையனுக்கு மட்டும் கடையில ஏதாவது வாங்கிக் கொடுத்துடுவேன். நான் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு அப்படியே படுத்துப்பேன். ஒரு நாளைக்கு ஒரு வேளதான் சாப்பிடுவேன். அதுவும் அந்தக் கோயில்ல போடுறத வாங்கி சாப்பிட்டுட்டு கம்முனு படுத்துடுவேன்; கட்டடத் தொழிலாளி பச்சையம்மா இப்படித்தான் 500, 1000 ரூபாய் வாபஸை 50 நாட்களாக பசி, பட்டினியுடன் எதிர்கொள்கிறார்.

சென்னை மாநகரில் கூலி வேலை (கட்டட வேலை) செய்ய ஆட்கள் தேவை என்றால், தங்கசாலை என்று அழைக்கப்படும் மின்டு ஸ்டீரிட்டுக்குப் போனால் போதும். அங்கங்கே தினம்தோறும் நூற்றுக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் கையில் பாண்டு, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்டவைகளோடு காத்திருப்பார்கள். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு வேலைக்காக ஏங்கும் அவர்களைச் சந்தித்தோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான சோகக் கதைகளோடு அங்கே அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டை பழனி.

எனக்கு அறுபது வயசு ஆகப்போகுது. நான் எத்தனையோ புயல், மழை, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டேன். ஆனா இந்த மாதிரி ஒரு பஞ்சத்த நான் பாத்ததே கிடையாது பா. இந்த எடத்துல தினமும் (மின்ட் ஸ்டீரிட்) காலையில குறைஞ்சது ஆயிரம் பேராவது வேலைக்காக வந்து நிப்பாங்க. மெட்ராசுல எந்த ஏரியாவ்ல கட்டட வேல நடந்தாலும் இங்க இருந்து ஆள் போவாங்க. இப்போ நூறு பேர்கூட இங்க வரது கிடையாது. வீட்டுக்குப் போய் வேல இல்லன்னு சொன்னா பொம்பளைங்க நம்ப மாட்றாங்க. அதனாலயே வீட்ல தினமும் சண்டை நடக்குது. இரண்டு மாசமா நாங்க படும் கஷ்டம் வாய் விட்டுச் சொல்ல முடியாத கஷ்டம். சொன்னா நம்ப மாட்டீங்க. நேத்து நைட்டு வீட்ல தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைங்க இருக்கு.

இதையும் படியுங்கள்: உங்கள் பேஸிக் போனில் பணம் அனுப்புவது எப்படி?

அவங்களோட எதிர்காலத்த நெனைச்சு அந்தத் தற்கொலை முடிவக் கைவிட்டுட்டேன். சென்னையில அம்மா உணவகம் மட்டும் இல்லன்னா இங்க எத்தனையோ பேர் செத்துட்டு இருப்பாங்க. அந்த நேரத்தில் அருகில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் காலை உணவு விற்கப்படுகின்றது. இந்தத் தள்ளுவண்டி கடையில இட்லி சாப்ட்டாகூட குறைஞ்சது இருபது ரூபா ஆகும். அதுக்கு நான் எங்க போறது? அம்மா ஹோட்டலுக்குப் போனா வெறும் அஞ்சே ரூபாயில கால சாப்பாட்ட முடிச்சிப்பேன். நான் மேஸ்திரியா இருக்கும்போது இங்க இருக்குற நிறைய பேருக்கு நான் வேல குடுத்து இருக்கேன். இப்போ ஒரு சிங்கிள் டீ குடிக்கக் கூட வழி இல்லாம உட்காந்து இருக்கேன். அதுக்கு ஏன் என்னோட முகத்துல இருக்க தாடிய மழிக்கக்கூட காசு இல்லை என்று கூறி வேதனைப்பட்டார் பழனி.

பழனி நம்மோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து நின்றார் ரமேஷ். விருதுநகர் மாவட்டம் சாத்தூர்தான் எங்க சொந்த ஊர். நான் சென்னைக்கு வந்து பதினைந்து வருஷம் ஆகுது. கட்டட வேலதான் எனக்குத் தெரிஞ்ச தொழில். எனக்கு இரண்டு பையன், ஒரு பொண்ணு. வாடக வீ்ட்லதான் குடியிருக்கேன். ஆனா நான் இரண்டு மாசமா வாடகையே கொடுக்கவில்லை. அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்து வச்சிருந்தேன். அதுலதான் வாடகைய கழிச்சிக்குறாங்க. நான் வீணா எந்தச் செலவும் செய்ய மாட்டேன். ஆனா வீட்டுக்கு அரிசி வாங்கி கொடுக்கக்கூட முடியாத நிலைமையில இருக்கேன். இந்த ரூபா நோட்டுப் பிரச்சன எப்ப வந்துச்சோ அதுல இருந்து, நாங்க ஒரு வேளதான் சாப்பிடுறோம். எங்களோட வேல செஞ்சிகிட்டு இருந்த பையன் இப்ப இல்ல.

அவன் பேரு உதயகுமார். கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகர்தான் அவங்க ஏரியா. எங்ககூடதான் வேலைக்கு வருவான். இந்த ஐநூறு, ஆயிரம் ரூபா நோட்டு செல்லாதுன்னு அறிவிச்ச பிறகு எங்களுக்கு வேல இல்லாம் போச்சு. இங்க வந்து பாத்துட்டு தினமும் வேல இல்ல, வேல இல்லன்னு வீட்ல போய் சொன்னதால அவங்க மனைவிக்கும் அவனுக்கும் சண்ட. முந்தாநாள் நைட்டு மண்ணெண்ண ஊத்திக் கொளுத்திக்கினு செத்துட்டான். இந்த நெலம தொடர்ந்தா இங்க இருக்குற எத்தனை பேரு செத்துப் போறாங்கன்னு தெரியாது. மோடியின் அறிவிப்புக்குப் பிறகு நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும் தங்களை வேலையில்லாத் திண்டாட்டம் துரத்தினால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆதங்கமாக நம்மிடம் பேசினர் அந்தக் கட்டடத் தொழிலாளர்கள்.

இதையும் படியுங்கள்: யு.பி.ஐ ஆப்: பயன்படுத்துவது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்