கடந்த ஜனவரியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞச்ன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இரண்டு பேரை உச்சநீதிமன்ற பதவிக்குப் பரிந்துரைத்தது. இதில் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் இந்து மல்கோத்ரா ஆகியோர் ஆவர்.

கொலிஜியம் அனுப்பிய பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் குரியன் ஜோசப், இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அதில், இந்த நியமனங்களை செயல்படுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்தான், இந்து மல்கோத்ரா நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, கே.எம்.ஜோசப் நியமனத்திற்கு வழங்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கெதிராக அவர் அளித்த தீர்ப்புதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

பின்னணி என்ன?

கடந்த 2012ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டில், உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர், முதல்வருக்கு எதிராக செயல்பட்டனர்.

இந்நிலையில், மத்திய அரசு, 356வது பிரிவின் கீழ் உத்தரகாண்ட் மாநில அரசைக் கலைக்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், மத்திய அரசின் நடவடிக்கை தங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தனி அமைப்புபோல செயல்பட்டிருப்பதாகவும் குரிப்பிட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மத்திய அரசுக்கெதிராக நீதிபதி கே.எம்.ஜோசப் அளித்த தீர்ப்பினால்தான் அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்கப்படவில்லை என இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நீதிபதிகள் பழிவாங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயந்த் படேல், குஜராத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி தலைமையிலான மாநில அரசு, இது தொடர்பான விசாரணைக்கு தடைகள் ஏற்படுத்துவதாகவும் கண்டனம் தெரிவித்திருந்தார். இத்தீர்ப்பின் காரணமாகவே, அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய அரசுக்கெதிராக எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here