தற்போதைய பணத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

1. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதனால், மக்கள் தங்கள் கைகளிலிருந்த பணத்தை மாற்றுவதற்காக கடும் சிரமத்திற்குள்ளாகினர். பணத்திற்காக ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர்.

2. கடந்த மூன்று நாட்களாக இதே அனுபவத்தை வடமாநில மக்கள் அனுபவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள பல வங்கிகளின் ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு ஏற்பட்டது.

3. பணத்தட்டுப்பாடு குறித்து பேசிய, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்தில் 70 முதல் 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை விநியோகிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமே என்றும், போதிய அளவு பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

4.தற்போதைய பணத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் உள்ள முன்னணி வங்கிக் கிளைகளில் பணத்தட்டுபாடு ஏதும் இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

5. பணத்தட்டுப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பவன் கெரா, தற்போதைய பணத்தட்டுப்பாடு நிலைமைக்கு பிரதமர் மோடிதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு கீழ்த்தரமான அரசியலை மட்டுமே செய்து வருவதாகவும், அரசு நிர்வாகத்தை கவனிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அதே போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அபிஷேக் சிங், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனைக்கு தற்போதைய நிலை ஒத்துவருவதாக கிண்டலடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்