ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையிலுள்ள சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குமரெட்டியார்புரம் கிராம மக்கள், தொடர்ந்து 57வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஏப்.9), தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம், சில்வர்புரம், பாளையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், தூத்துக்குடி – நெல்லை சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடினால்தான் தங்கள் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படியுங்கள்: #Periyar: “பெரியாரைப் படித்தாலே நடத்தை கெட்டவள் என்று சொல்வதுதான் இன்றைய நிலைமை”