குஜராத் கலவரம்; இவர்கள் இருவரையும் நினைவிருந்தால் இதைப் படியுங்கள்

0
406

குஜராத் கலவரத்தின்போது இரண்டு முகங்கள் பிரபலமானது முதல் படம் குதுபுதீன் அன்சாரி – நரோடா பாட்டீயாவில் எடுக்கப்பட்டது.  நடந்த கலவரத்தின் கோரமுகத்தை காட்டுவதாக இருந்தது. இரண்டாவது படம் அசோக் மோச்சி இந்து ராஷ்டிரத்தின் தூதுவரைப் போல இருந்தார். கலவரத்தை கையில் ஏந்திக் கொண்டு நின்றவர். செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தவர் . 

குஜராத் கலவரத்தின் போது எதிரெதிர் துருவங்களாக இருந்த இவர்கள்  மத நல்லிணக்கத்துக்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். 

அசோக் மோச்சி டெல்லியில் திறந்திருக்கும் செருப்புக்கடையை குதுபுதீன் அன்சாரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார்.  நரோதா பாட்டீயாவில் அவரது வீட்டின் அருகில் கலவரம் நடந்த போது ரத்தம் தோய்ந்த சட்டையுடனும், அழுதுக் கொண்டே அதிரடி படை வீரரிடம் உதவி கேட்ட குதுபுதீன் அன்சாரி தையல் தொழில் செய்து வந்தார். தற்போதும் அதேத் தொழிலைத் தொடருகிறார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு கொஞ்சகாலம் மேற்கு வங்கத்தில் வசித்திருக்கிறார். பின்பு நிலைமை சீரான பின் குஜராத்துக்கு திரும்பியிருக்கிறார். 

அசோக் மோச்சி சந்தோசமாக வாழ்வதை பார்ப்[பதில் என்க்கும் மகிழ்ச்சி. நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம் என்றும் கடையை திறந்து வைத்த குதுபுதீன் அன்சாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் உனாவில் பசுமாட்டின் தோலை உரித்த தலித் இளைஞர்களை, பசுக்குண்டர்கள் சிலர்  கட்டி வைத்து தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இந்தச் சம்பவத்திற்கு பிறகு அசோக் மோச்சி தலித் ஆசாதி கூச் என்ற அமைப்பில் சேர்ந்தார். இந்து வர்ணாசிரம் என்னை செருப்பு தைப்பவனாகவே வைத்திருக்கிறது. என்னை வளர விடாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். 

குஜராத் கலவரத்தின்போது இந்து ராஷ்டிரத்தின் தூதுவரைப் போல் இருந்த அசோக் மோச்சி தற்போது தலித் – முஸ்லிம் ஒற்றுமைக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.   . 

இவரது பெயர் அசோக் பார்மர் ( அசோக் மோச்சி) . பின்னால் தீபற்றி எரிய,  தலையில் காவி ரிப்பனுடன் கையில் இரும்புக் கம்பியுடன் போஸ் கொடுத்திருந்தார்.  

சாலையோரத்தில் செருப்புதைப்பவரான அசோக் மோச்சிக்கு வீடு எதுவும் இல்லை.  

 தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து 10 நாட்கள் சவர்குந்தலாவில் நடந்த யாத்திரையில் கலந்துக் கொண்டார் .  தலித் முஸ்லிம் ஒற்றுமை மிகத் தேவையானது. இரண்டு சமூகங்களும் ஒடுக்கப்பட்ட ஏழை சமூகம். மாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இரண்டு சமூகங்கள் மீதும் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. நிம்மதியாக வாழவும், ஒரு வீடு வைத்துக் கொள்ளவும் இந்திய குடிமகன் ஒவ்வொருத்தருக்கும் உரிமை இருக்கிறது. தனது வேலையைத் தேடிக் கொள்ளவும், தனக்கு பிடித்தவற்றை அணியவும் , உண்ணவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது என்று இந்தியா டைம்ஸிடம் அசோக் மொச்சி கூறியுள்ளார்.   

 என்னை  எல்லோரும் பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் , தீவிரவாத காவியின் முகம்,  இனப்படுகொலையின் முகம் என்றெல்லாம் கூறினார்கள் . நான் அப்படிப்பட்டவன் இல்லை. கலவரம் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு நான் காதலித்து வந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டாள் . கலவரம் நடந்ததால் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது நான் தினக்கூலி என்பதால் வேலையும் இல்லை. என்னுடைய நிலைமையை நினைத்து மிகவும் எரிச்சலோடும், கோபத்தோடும் வந்துக் கொண்டிருந்தேன். முஸ்லிம்களை இந்துக்கள் அடித்துக் கொன்றுக் கொண்டிருந்தனர். நான் தாடி வைத்திருந்ததால் என்னை முஸ்லிம் என்று நினைத்து விடக்கூடாது என்றெண்ணி என்னைக் காத்து கொள்ள தலையில் காவி ரிப்பனைக் கட்டிக் கொண்டேன். 

அப்போது மும்பை மிரர் பத்திரிகையின் போட்டோகிராஃபர் என்னை கலகக்காரன் மாதிரி கையில் இரும்புக் கம்பியுடன் போஸ் கொடுக்க சொன்னார். நானும் போஸ் கொடுத்தேன் மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் என் ஒளிப்படம்தான் தலைப்பு செய்தியாகி இருந்தது. என்னை குஜராத் கலவரத்தின் வில்லனாக பார்த்தார்கள் . இதனால் 14 நாட்கள் சிறையில் இருந்தேன் . பின்பு நான் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று என்னை விடுவித்தது நீதிமன்றம். அந்த ஒளிப்படம் அவ்வளவு பெரிய பிரச்சனையில் முடியும் என்று நான் நினைக்கவே இல்லை.  

இந்த ஒளிப்படம் எடுத்த மும்பை மிரரின் போட்டோகிராஃபர் டி ஷோஷா கூறியிருந்தது  இதுதான் – கும்பல் சேர்ந்து கார்களை எரித்துக் கொண்டும் மக்களை குத்திக் கொண்டும் இருந்தனர். நான் பயணம் செய்த காரின் ஓட்டுனர் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அப்போது தூரத்தில் ஒருவர் ( அசோக் மோச்சி) தன்னுடைய கும்பலுக்கு தலைமைத் தாங்கி வந்துக் கொண்டிருந்தார். நான் என்னுடைய கேமராவில் 300 mm லென்ஸ் வைத்து அவரை படம் பிடித்தேன்.   வெகுதூரத்தில் அவர் நின்றுக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து விலகியதும் அவர் பலமாக சத்தமிட்டார். 

அசோக் மோச்சிக் குறித்து  வழக்கறிஞர் கூறியதாவது . அவர் மீது எந்த வழக்கும் முதலில் பதியப்படவில்லை. பின்பு கமிஷனரின் தலையீட்டால் வழக்கு பதியப்பட்டு சரியான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார் என்றிருக்கிறார். 

முகமது ஹூசைன் என்ற சிறுவியாபாரியின் வீட்டைக் தீயிட்டு கொளித்தியது அசோக் மோச்சியும் அவரது கும்பலும் என்கிறார் நேரில் பார்த்து  சாட்சியான முகமது ஹூசைன்.  அசோக் மோச்சி அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியிருந்தார் முகமது ஹூசைன். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here