9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என மாநில தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனிடையே முழு தேர்தலையும் தள்ளிவைக்க வேண்டும் என திமுக வாதாடியது. 

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் எனவும் மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளது. அதனால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here