9 கோடீஸ்வரர்கள் இந்தியாவின் 50 சதவீத சொத்துகளை வைத்திருக்கிறார்கள். 10 சதவீத கோடீஸ்வரர்கள் இந்தியாவின் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இந்த நிலைமையே தொடர்கிறது. ஆண்டுக்கு ஆண்டு ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

அடிமட்டத்தில் உள்ள 60 சதவீத மக்களிடம் நாட்டின் 4.8 சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. நாட்டின் 9 பணக்காரர்களிடம் மட்டும் நாட்டின் 50 சதவீத சொத்துகள் உள்ளன.

இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது இது ஆரோக்கியமானதல்ல என்றும் எச்சரித்துள்ளது.

ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பான்யிமா கூறுகையில், ”இந்தியாவில் உள்ள ஏழைகள் அடுத்த வேளை சாப்பிடுவதற்கும், தங்களின் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும் போராடி வருகிறார்கள். ஆனால் சில குறிப்பிட்ட கோடீஸ்வரர்களின் சொத்துகளின் அளவு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அசுர வேகத்தில் வளர்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்துவிடும்”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துகள் மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவீத ஒட்டுமொத்த சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் மட்டும் நாட்டின் 51.53 சதவீத சொத்துகளையும் வைத்துள்ளனர்.

2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்களை நாள்தோறும் உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 18 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு 325.50 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு 440.10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒரு சதவீதம் பேரின் சொத்துகள் மீது 0.5 சதவீதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு செலவிடக் கூடுதலாக 50 சதவீதம் நிதி கிடைக்கும்.

மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைவிட குறைவுதான்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர்கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களின் இருக்கும் குழந்தைகள், பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள்ளாக இறக்கும் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் இந்த ஏழை, பணக்காரர் இடைவெளி பணத்தை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. ஜாதி மற்றும் ஆண்,பெண் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு தலித் பெண் ஒரு உயர் ஜாதி இந்துவை விட 14.6 வருடம் குறைவாகவே வாழமுடிகிறது என்று இந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது .

பொதுச்சேவைகளுக்கு அதாவது சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்குக் குறைவான நிதி ஒதுக்குவது, மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொதுச் சேவைகளை தனியாருக்கு கொடுத்திருப்பது, ஆண், பெண் சமத்துவமின்மையால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகள், கூலி கொடுக்காமல் இருப்பது, பெண்கள் வேலை செய்தால் சரியாக கூலி கொடுக்காமல் இருத்தல், நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல், ஆகியவைதான் இந்த ஏழை , பணக்காரர் இடையே அதிகரித்துவரும் இடைவெளிக்கு காரணம் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.

கிராமப்புறங்களில் சரியான மருத்துவ சேவை இல்லாமல் இருப்பது, அரசின் மருத்துவ காப்பீடுகள் கூட கிரமப்புற மக்களுக்கு சரியாக சென்றடையாததும் பெண்கள் , குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மருத்துவ சுற்றுலா குறியீட்ட்டில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியா , அதன் சொந்த குடிமக்களுக்கு ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அணுகுமுறையில் உலகில் 195 நாடுகளில் 145 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியாவில் ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றால் பொருளாதார சமத்துவமின்மை அதிகமாகி கொண்டே வருகிறது . இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து உடனே சரி செய்ய வேண்டும் . அரசு பணக்காரர்களிடமும் , பெரிய நிறுவனங்கங்களுடமும் சரியாக வரி வசூல் செய்து பொது சுகாதாரமும் , கல்வியும் சதாரண மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். அரசு பணக்காரர்களுக்கு மட்டும் சலுகை செய்யாமல் எல்லோருக்குமான சமுதாயத்தை நிறுவிட வழி வகைச் செய்ய வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here