கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’. இச் சட்டத்தில் 8ஆம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது என்று புகார் எழுந்தது.

அதனால் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அவை மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும் சட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.

இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here