ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. புஜாரா 193, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்கள்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியது.

இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் பாலோ-ஆன் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஆடத்தொடங்கியது.

நேற்று 4வது நாள் ஆட்டத்தின் போது, தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டு பின் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

கடைசி நாளான இன்றும்(திங்கள்கிழமை) மழை தொடர்ந்து பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு மைதானத்தை நடுவர்கள் சோதித்துப் பார்த்தனர். அதன் பின்னர் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here