7 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது வாலிபருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 2வது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் இதேபோல் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டத்தை இயற்றியது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 9ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் லக்‌ஷ்மன்கர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த 7 மாத பெண் குழந்தை காணாமல் போனது. பதறிய பெற்றோர்கள் எல்லா இடத்திலும் தேட, வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்பந்து மைதானத்தில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, 20 நாட்கள் வரை அந்தக் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கோர சம்பவம் தொடர்பாக, குழந்தையுடைய தாயின் உறவினரான 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அறிமுகப்படுத்திய புதிய சட்டம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் அதிவிரைவு நீதிமன்றத்தில் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

13 முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் இந்த பாதகத்தை செய்த குற்றவாளிக்கு, புதிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்