ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரிய நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், மனுவை ஏற்பது தொடர்பாக இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆளுநர் என்பவர் அதிகாரம் கொண்டவர், அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கைதியான நளினி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறேன். நான் எனது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. பல மாதங்கள் கடந்து பின்னரும் அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

எனவே, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ஆளுநருக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர முடியாது என வாதிட்டார். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது கடந்த 8 மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. எனவே அமைச்சரவையின் பரிந்துரையைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது’ எனக் கூறி வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்வதாக இன்று தீர்ப்பளித்தனர்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here