புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு, திட்டத்தை 6 மாதங்களில் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையின் போது, கிராமப் பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதே பகுதியில் மாற்று இடம் வழங்குவதென அறிவிக்கப்பட்டது. மாற்று இடம் கிடைக்காதபட்சத்தில் அதே பகுதியில் தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றுவது குறித்து கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒரு சிறப்பு வரன்முறைத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நியமிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பரிந்துரைத்த நெறிமுறைகளை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

5 பக்கங்கள் கொண்ட அந்த அரசாணையை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ளார். அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசிக்கும் பொதுமக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாற்று அரசு இடம் கிடைக்காதபட்சத்தில், அதே பகுதியில் தனியாரிடம் இடத்தை விலைக்கு வாங்கி புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு தலா 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடப் பற்றாக்குறை இருந்தால், பொது மக்கள் வசிக்கக்கூடிய இடத்தையே மறு ஆய்வு செய்து, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகள் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் இலவச வீட்டு மனை பெறக்கூடிய குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாணைப்படி, ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்கள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்புகளை தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் ஏற்கனவே அமலில் இருந்தாலும், தனியாரிடம் இடத்தை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்