தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்த அரசாணையில் பல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50க்கும் மேற்பட்ட  பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப  அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகள், ஏற்கெனவே அந்தந்தத் துறை சார்ந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவீத பாடங்களைக் கொண்டவையாக இருந்தால் மட்டுமே, அந்தப் புதிய படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். 70சதவீதத்துக்கும் குறைவான மூலப் பாடத் திட்டத்தின், பாடங்களைக் கொண்டிருந்தால், அந்தப் புதிய படிப்பு குறிப்பிட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இதனை ஆய்வு செய்ய உயர்கல்வித் துறை செயலர், பேராசிரியர்கள், நிபுணர்கள் அடங்கிய பட்டப்படிப்பு  இணைக் குழு ஒன்றை அமைத்து, எந்தெந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையானவை அல்லது இணையற்றவை என்ற பட்டியலை அரசாணையாக அவ்வப்போது வெளியிட்டு வரும்.

இந்த அரசாணையின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும். அந்த வகையில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக (அரசாணை எண்.66)அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்.பி.ஏ. படிப்புகள்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. சந்தை மேலாண்மை, எம்.பி.ஏ. சர்வதேச வணிகம், எம்.பி.ஏ. இணைய-வணிகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.பி.ஏ. உலக மேலாண்மை, ஆன்-லைன் எம்.பி.ஏ., எம்.பி.ஏ. நிதி மேலாண்மை  ஆகிய படிப்புகள் அரசு பொதுத் துறை நிறுவன பணிகளுக்கான எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கு இணையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசுத் துறைகளில் எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கான பணிகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

இரட்டைப் பட்டப் படிப்புகள்: அதேபோல, இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பல்வேறு இரட்டை பட்டப் படிப்புகளும் அரசுப் பணிகளுக்கு தகுதியானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும்  பி.எஸ்சி. கணினி அறிவியல்  – பி.எஸ்சி. கணிதம் இரட்டைப் பட்டப் படிப்பு  அரசுப் பணிக்கான பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.பி.ஏ. இரட்டைப் பட்டப் படிப்பு , பி.ஏ. சமூகவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. அரசியல் அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. வரலாறு இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கிலம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. பொருளாதாரம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.காம். இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. காட்சி தகவல் தொடர்பியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. புள்ளியியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. கணினி அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு ஆகியவை அந்தந்த மூலப் படிப்புகளுக்கு இணையானவை அல்ல எனவும், அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற படிப்புகள்: பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை (அப்ளைடு) நுண்உயிரியல் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த உயிரியல், எம்.எஸ்சி. உயிரியல் படிப்புகள், காந்திகிராம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை உயிரியல்,  பாரதிதாசன் பல்கலை. சார்பில் வழங்கப்படும்  5 ஆண்டுகள்  ஒருங்கிணைந்த  எம்.எஸ்சி.  உயிர் அறிவியல்,  அண்ணாமலைப்  பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும்  5 ஆண்டுகள்  ஒருங்கிணைந்த  எம்.எஸ்சி. விலங்கியல்,  எம்.எஸ்சி.  கடல்வாழ்  நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்.எஸ்சி. விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேலும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.


இது குறித்துப் பேசிய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் : புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் 70 சதவீத பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அப்போதுதான், அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு அந்தப் புதிய படிப்புகள் இணையானவையாக எடுத்துக்கொள்ளப்படும். அவைத்தான் இந்தப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, இந்தப் படிப்புகளை மேற்கொள்வதால் எந்தவொரு வேலைவாய்ப்புமே கிடைக்காது எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here