சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது விவகாரத்தில் சாட்சிகள் புனையப்பட்டதாக இருந்தால் உச்சநீதிமன்றம் நிச்சயமாக சிறப்பு விசாரணை குழு அமைக்கும் என்று கூறியது . இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

தலைமை நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான போதுமான ஆதாரங்களைப் பார்த்த பிறகே இது குறித்து தீர்ப்பளிக்கும்.

நாங்கள் ஆதாரங்களை பார்க்க வேண்டும். ஆதாரங்களைப் பார்த்த பிறகு அந்த ஆதாரங்கள் போலீஸால் அல்லது அரசால் புனையப்பட்டதாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் சிறப்பு விசாரணை குழு அமைப்போம். நாங்கள் எங்கெல்லாம் சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறோமோ அங்கெல்லாம் குற்றவியல் நடைமுறை மீறப்பட்டிருக்கிறது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் போலீஸால் புனையப்பட்ட ஆதாரங்களுடன் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை சமர்பித்தார்.

நாங்கள் ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாட்டோம். எல்லா குற்றபின்னணிக் கொண்ட வழக்குகளிலும் ஆதாரங்கள் புனையப்பட்டவை என்று கூறுவார்கள் . மனுகொடுத்தவர்களும் அரசும் ஆதாரங்களை சமர்பிக்கலாம் . செப்டம்பர் 19 ஆம் தேதி பார்க்கலாம் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

ஐந்து சமூக செயற்பாட்டாளர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க எல்லாவற்றையும் இந்த நீதிமன்றம் செய்யும்.
அவர்களின் வீட்டுக் காவல் தொடரும் என்றும் கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவரா ராவ், சமூக செயற்பாட்டாளர்கள் வெர்னான் கான்செல்வ்ஸ், அருண் ஃபெரெய்ரா, மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லக்கா ஆகியோரை புனே போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் பீமா – கோரேகானில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பை, நாக்பூர், டெல்லியில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்தக் கடிதத்தில், ராஜிவ் காந்தியை கொன்றது போல மோடியை கொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 கோடி மதிப்பில் எம்-4 ரக துப்பாக்கியும்,4 லட்சம் ரவுண்ட் புல்லட்களும் வாங்குவது பற்றியும் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அந்த கடிதத்தில், வரவரா ராவின் பெயரும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள கோரேகான் என்ற இடத்தில், கடந்த 1818ஆம் ஆண்டு, உயர் ஜாதியினருக்கு எதிராக நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் வெற்றிபெற்றனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜன.1ஆம் தேதி, தலித் சமூகத்தினர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்