45 வருடங்களில் வரலாறு காணாத அளவில் 6.1% அதிகரித்த வேலைவாய்ப்பின்மை- தேர்தலுக்கு பிறகு உறுதி செய்த மத்திய புள்ளியியல் அமைச்சகம்

0
402

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நகர்புறங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாக உள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் 2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை குவித்தது. இதையடுத்து அப்படியொரு தகவல் வெளியிடப்படவில்லை என மத்திய அரசு  மறுத்தது.

தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில்,  வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

தேர்தலுக்கு முன்பாக கசிந்த நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மே 31ஆம் தேதி அரசு தரவுகளின் படி வேலையின்மை விகிதம் 2017-18-இல் 6.1%  ஆக உள்ளது. 

மோடி 2.0 அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு மத்திய புள்ளியியல் அமைச்சகம் இந்த வேலையின்மை விகிதத் தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது நகர்ப்புறத்தில் வேலையில் அமர்த்தக்கூடிய தகுதியுடைய அனைத்து இளைஞர்களில் 7.8% வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். கிராமப்புறத்தில் இதே விகிதம் 5.3% ஆக உள்ளது.

இந்தியா முழுதும் வேலையில்லாமல் தவிக்கும் ஆண்களின் விகிதம் 6.2% ஆகவும் பெண்களின் விகிதம் 5.7% ஆகவும் உள்ளது என்கிறது மத்திய புள்ளியியல் அமைச்சக தரவுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here