(December 30, 2015)

தனியார் துறையில் கைநிறையச் சம்பளம். கூடவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தன் வேலையாகக் கொண்டிருந்தார் ஜெகன். அப்படி இருக்கும்போது, ஒருநாள் பள்ளி மாணவி ஒருவரது வீட்டிற்கு நள்ளிரவு 12 மணிக்குச் செல்கிறார், உதவித்தொகை கொடுப்பதற்காக. சென்றவர்க்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. விவசாயியான பெண்ணின் தந்தை, பசியின் கொடுமையால் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு படுத்திருந்தார். இந்தச் சம்பவம்தான், ஜெகன் தன் வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை முழுமூச்சுடன் செய்வதற்குக் காரணமாக இருந்தது. இப்போது இளைஞர்கள் யாராவது இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் ஆலோசனைக்கு விரைவது, ‘நல்லகீரை’ ஜெகனின் பண்ணைக்குத்தான்.

கீரை அறுவடை செய்யும் ஜெகன்
கீரை அறுவடை செய்யும் ஜெகன்

”பூச்சிக்கொல்லி வாங்கியதுக்குக் கடனைக் கொடுக்க முடியாமல் விவசாயிகள் சாகிறார்கள். நமக்கெல்லாம் உணவு கொடுத்த விவசாயிக்கு உணவில்லை. இன்னொன்று, நாம் எதெல்லாம் நல்லதுனு நெனச்சிக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கொடுக்குறோமோ அது எல்லாமே விஷம். யூரியா தெளிச்சக் கீரையே கெடுதல். அதனாலதான் இயற்கை விவசாயத்துல முதல்ல கீரைல இருந்து ஆரம்பிச்சோம். ‘நல்ல கீரை’ ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகுது. கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்தையும், இயற்கை உணவுப் பொருட்களையும் கொண்டு போய் சேர்க்கணும். அதுதான் நல்லகீரையின் கனவு”, என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறார், ஜெகன்.

சென்னையிலிருந்து 39 கி.மீ.தொலைவில் உள்ளதுதான் பாக்கம் என்கிற சிறிய கிராமம். கிட்டத்தட்ட 250 வீடுகள் இருக்கும். ’நல்ல கீரை’ இயற்கை விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு ஜெகனுடன் 25 இளைஞர்கள் சேர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளிலும் ஒரு சர்வே எடுத்தார்கள். அதன் முடிவில், கிராம மக்களின் 60 சதவீத சம்பளம், அதாவது 1.6 கோடி ரூபாய் வெறும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், சாராயம், மருந்து செலவுக்கே செலவிடுகிறார்கள் என்று தெரிய வந்தது. அதுதான் ஜெகனை இயற்கை விவசாயத்தைத் தெரிந்துகொள்ளத் தூண்டியது.

“நான் மட்டும் இதப் பண்ணிடல. இயற்கை விவசாயம் மேல ஆர்வம் இருக்குற 25 இளைஞர்கள் என்னோட இருந்தாங்க. அதுல பாதிப் பேர் வேலைய விட்டுட்டு முழுசா விவசாயத்துல இறங்குனாங்க.”, என்கிறார் ஜெகன். உண்மைதாங்க, கௌதம் பாலாஜி தன்னோட 75,000 ரூபாய் சம்பளத்த விட்டுட்டு வந்தாரு.

பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க புறப்பட்ட இளைஞர்கள்
பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க புறப்பட்ட இளைஞர்கள்

கை நிறைய சம்பளத்தோட உள்ள வேலைய விட்டா வீட்ல சும்மா இருப்பாங்களா? ஆரம்பத்துல ஜெகன் வீட்லயும் எதிர்ப்பு வந்துது. ஆனா, விவசாயத்தப் பத்தி படிக்கிறது, இதே நினைப்போட இருந்ததால வீட்லயும் இவருக்கு இப்ப ஆதரவு.

எல்லா இளைஞர்களுக்கும் நம்மாழ்வார் ஒரு ஹீரோ. அதுவும் இயற்கை விவசாயத்தில் இறங்கும் ஒருவருக்கு சொல்லவே வேண்டாம். ஜெகனுக்கு ஆரம்பத்தில இயற்கை விவசாயத்தில் சில அறிவுரைகள வழங்கியதே நம்மாழ்வார்தான். “ஐயா இல்லன்னா நல்ல கீரையே கிடையாது. சில விஷயங்கள நல்லா மண்டைல உறைக்கிற மாதிரி சொல்லித் தருவாரு.” என்று நம்மாழ்வாருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

”50 வருசமா நச்சக் கலந்து கலந்து நம்ம மண்ண மலடாக்கிட்டாங்க. அதுல விளைவிக்கிறத சாப்புட்டு சாப்புட்டு நம்மளும் மலடாயிட்டோம். அதனாலதான் இப்ப குழந்தைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாயிட்டு வருது. நம்ம உடம்புல கலக்குற நச்ச சேமிக்க இடமே இல்ல. அதனாலதான் புற்றுநோய் அதிகமாயிட்டு வருது. இயற்கை விவசாயத்த மக்கள்கிட்ட சீக்கிரமாக் கொண்டு போய் சேர்க்கணும்னு அவசியம் ஏற்பட்டு இருக்கு”, என்று தன்னுடைய ஆதங்கத்தை இயல்பாகவே வெளிப்படுத்தினார், ஜெகன்.

விவசாயிகள் அனைவரையும் அவ்வளவு எளிதில் இயற்கை விவசாயத்தை நோக்கித் திருப்பிட முடியாது. இத்தனை வருசமா பூச்சிக்கொல்லி, வேதிஉரங்கள் போட்டுப் பாழாக்கிவிட்ட நிலத்தினை இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும். “இந்த மாதிரி மாற்றக் குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும். அதுவரைக்கும் அந்த விவசாயி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான். நான் போய் இயற்கை விவசாயம் பண்ணலாம் வாங்கனா யார் வருவா? இயற்கை விவசாயத்துல முதல்ல குறைவாதான் விளைச்சல் வரும். அதப் பாத்துக் கண்டிப்பா விவசாயிகள் பயப்படுவாங்க. அதனாலதான் இவங்கள இயற்கை விவசாயத்துக்கு திருப்ப நான் முதல்ல இதுல சாதிக்கணும்.

இயற்கை விவசாயமும் தொழில்தான். அறக்கட்டளை மாதிரி இதப் பண்ணல என்று சொல்கிறார் ஜெகன். நல்ல கீரையில் வருடத்துக்கு 4460 ரூபாயைக் கட்டினால் வாரத்துக்கு ஐந்து கீரை வகைகளை வீட்டுக்கு அனுப்புவார்கள். ”நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றுகிற வரைக்கும் விவசாயிக்குப் பொருளாதாரரீதியாக உதவி செய்யத்தான் இந்த வருடாந்தர சந்தா முறையை அறிமுகப்படுத்தினோம்” என்று நல்ல கீரையின் தொழில் வளர்ச்சி அலுவலர் சந்தோஷ் கூறினார்.

”இங்க நாங்க மண் இல்லாமலே கீரைய விளைவிக்கிறோம். மரத்தூள், மாட்டுச் சாணம் ரெண்டும்தான் எல்லாம். அதுலதான் எல்லாம் இருக்கு. இயற்கை விவசாயம் மேல எனக்கு ஆர்வம். அதான் நல்ல கீரையில சேர்ந்துட்டேன்.” என்று விவசாயத்தைப் பற்றி பேசுகிறார், நித்தியானந்தன். இவர் விவசாயத்தில் டிப்ளமோ படித்தவர். ஜெகனிடம் இப்பொழுது நிலத்தை வாங்கி கீரை விளைவிக்கப் போகிறார் சித்ரா. “என் கணவருக்கு விவசாயம் மேல ரொம்ப ஆர்வம். தஞ்சாவூர் நாங்க. விவசாயம் பண்ணலாம்னு தோணுச்சி. அதான் நல்ல கீரை ஜெகனுடன் சேர்ந்து விவசாயத்தக் கத்துக்கிட்டு வர்றன்” என்கிறார் சித்ரா. ‘இப்படிக்கு ரோஸ்’ புகழ் ரோஸும் ஜெகனுடன் சேர்ந்து பாக்கத்தில் பாரம்பரிய விதைகளை விதைக்கிறார். இப்படி எத்தனையோ பேர் இயற்கை விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல கீரைக்கு விரைகிறார்கள்.

அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அறிவித்த செய்தி அதிர்ச்சியானது. இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கான இலக்கு 19 கோடி டாலர். ஆனால், மருந்து தேவைக்கான இலக்கு 2790 கோடி. இந்த இரண்டுக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியே இயற்கை விவசாயத்தில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. உணவைவிட மருந்தில் அதிக பணம் செலவழிக்கிறோம் என்பதை இது புரிய வைக்கிறது.

ஒருபுறம் இந்தியாவில் அதிக அளவிலான குழந்தைகள் பசியினால் இறக்கிறார்கள். இன்னொருபுறம் அதிக அளவிலான உணவுப்பொருட்களை விளைவித்து வருடம்தோறும் வீணடிப்பதாக உணவுத் தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. ”பசுமைப் புரட்சியினால் நாம் நோயைத்தான் இதுவரை அறுவடை செய்திருக்கிறோம். கடன் தொல்லையினால் விவசாயிகள் இறக்கிறார்கள். இயற்கை விவசாயத்தினால் அதிக விளைச்சலைப் பெற்ற ஒரு விவசாயியின் வார்த்தைகளைக் காது கொடுத்து கேளுங்கள்” என்று ஆவேசமாகிறார் ஜெகன். அவரது வார்த்தைகளில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியம் மீதான அக்கறை தெரிகிறது. அவசியம் புரிகிறது. வெகுஜன மக்களுக்கு இயற்கை உணவுப்பொருட்கள் மீதும் இயற்கை விவசாயம் மீதும் நம்பிக்கை வர ஜெகன் மாதிரி மற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்.