ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 118 கோடி செல்போன் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. உலக அளவில் செல்போன், வாட்ஸ்அப் சேவைகளை அதிகம் பகிர்ந்து கொள்வது இந்தியர்கள்தான். இந்த தொலைத்தொடர்பு சேவைகளை பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரியலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகியவை வழங்கி வருகின்றன.

குறிப்பாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் இந்தியாவின் செல்போன் வாடிக்கையாளர்களில் சுமார் 90 சதவீதம் வரை கொண்டுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் தலா 30 சதவீதம் வாடிக்கையாளர்களை  தங்களிடம் வைத்துள்ளன.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மூன்று நிறுவனங்களாலும் அதிகளவு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களாக இவை இருந்தன. இதனால் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் அடுத்தடுத்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து கட்டணத்தை உயர்த்த இந்த நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமானால் கணிசமான அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவிப்பு வெளியானது. 

ஆனால் எந்த அளவுக்கு கட்டணம் உயரும் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் (டிச.1)நேற்று 3 செல்போன் நிறுவனங்களும் தொலைத்தொடர்புக்கான சேவை கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் கட்டணத்தை உயர்த்தின. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இம்முறை கட்டண உயர்வு மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சந்தாதாரர்களில் பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு என 2 வகையான சந்தாதாரர்கள் உள்ளனர். இதில் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை கட்டணங்கள் 40 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் கட்டணம் ரூ.129-ல் இருந்து ரூ.148 ஆகவும், 84 நாட்கள் சேவை கட்டணம் ரூ.448-ல் இருந்து ரூ.598 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய இரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டண உயர்வு நாளை (டிசம்பர் 3) முதல் அமலுக்கு வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருகிற 6-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நிறுவனமும் தனது கட்டணங்களை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளது. இதன் மூலம் 300 சதவீதம் கூடுதல் பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here