4 மாநில தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதுடன் குறு, சிறு தொழில்களுக்கான விதிமுறைகளையும் தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #GST
ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்ததற்கு பிறகு பல்வேறு பொருட்களும் இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டது.

இதில் சில பொருட்களுக்கு அதிகபட்ச வரி விகிதம் இருந்தது. இதனால் அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன.

அதையடுத்து அவ்வப்போது வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும்கூட இன்னும் சில பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் குறு, சிறு தொழில்களும் இந்த வரிமுறைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த முதலீட்டில் தொழில் செய்யும் நபர்களும் ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும், ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையை பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.யில் பதிவான நிறுவனங்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.

அவை ஒவ்வொன்றையும் ஜி.எஸ்.டி. பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு தொழில் செய்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

குஜராத் சட்டசபை தேர்தல் நடந்த போது குறு, சிறு தொழில் செய்தவர்கள் இந்த காரணங்களால் பா.ஜனதாவுக்கு எதிராக திரண்டார்கள். அதனால்தான் அங்கு பா.ஜனதா கடந்த தேர்தலை விட குறைவான இடங்களை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சில முக்கிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகமாக இருப்பது மற்றும் குறு, சிறு தொழில்களுக்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பது ஆகியவற்றால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

விரைவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடப்பதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.

மேலும் 4 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பா.ஜனதாவின் கோட்டை ஆகும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதாதான் ஆட்சியில் உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

எனவே, மேலும் பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதுடன் குறு, சிறு தொழில்களுக்கான விதிமுறைகளையும் தளர்வு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்ய உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற 28-ந் தேதி கோவாவில் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பல்வேறு பொருட்களுக்கு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

குறு, சிறு தொழில்கள் ரூ.5 கோடி வரை விற்று முதல் (டர்ன் ஓவர்) இருந்தால் அவர்கள் வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

இதில் விலக்கு அளித்து உச்சவரம்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் பல்வேறு விதிமுறைகளை தளர்வு செய்ய உள்ளனர்.

இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரியினால் உள்ள அதிருப்திகளை சரி செய்யலாம் என மத்திய அரசு கருதுகிறது.

மத்திய பிரதேசத்தில் 27 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்களும், ராஜஸ்தானில் 26 லட்சம் நிறுவனங்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு சாதகமான முடிவுகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்க இருப்பதால் அவர்களின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். #GST

courtesy:maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here