இந்திய வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று, இனியும் நடக்கக் கூடாத ஒன்று இன்று நடந்துள்ளது.

அடுத்து தலைமை நீதிபதியாக வரவுள்ள நீதியரசர் ரஞ்சன் கோகோய், இன்னோரு மூத்த நீதியரசர் செல்மேஷ்வர், நீதியரசர்கள் மதன் லோகூர், குரியன் ஜோசஃப் ஆகிய நால்வரும் இன்று காலை செல்மேஷ்வர் அவர்களின் இல்லத்தில் கூடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளது நீதித்துறை இது வரை கண்டிராத ஒரு நிகழ்வு.

நால்வரின் சார்பாகவும் பத்திரிகையாளர்கள் முன் பேசிய நீதியரசர் செல்மேஷ்வர், “இது மனதுக்கு உவப்பான ஒரு செயல் அல்ல” எனவும் தாங்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்லியுள்ளது மட்டுமின்றி இரண்டு மாதத்திற்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அவர்கள் நால்வரும் எழுதிய ஒரு ஏழு பக்கக் கடிதத்தையும் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பான சில முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பைத் தங்களுக்கு வேண்டிய நீதிபதிகளுக்கு அளிக்கும் நிலை குறித்துக் கவலை தெரிவித்து எழுதப்பட்ட கடிதம் அது. சில பிரச்சினைக்குரிய வழக்குகள் (sensitive cases) மிகவும் இளம் நீதிபதிகளின் விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், “மிகத் தீவிரமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இப்படியான வழக்குகள் உச்ச நீதிமன்ற அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவதில், “வெளிப்படைத் தன்மை இல்லாதது கவலை அளிக்கிறது” எனவும் கூறியுள்ளனர்.

“சொராபுதீன் என்கவுன்டர் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பி.எச்.லோயா மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கைப் பற்றிச் சொல்கிறீர்களா எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “ஆம்” என அடுத்துத் தலைமை நீதிபதிப் பொறுப்பை ஏற்க உள்ள நீதியரசர் ரஞ்சன் கோகோய் பதிலளித்துள்ளது இன்றைய பிரச்சினை என்ன என்பதைத் தெளிவாக்கி விட்டது.

தற்போதைய தலைமை நீதிபது தீபக் மிஸ்ரா இன்றைய ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர் என்று ஒரு கருத்து பரவலாக உள்ளது. சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவரும், பா.ஜ.க வின் அகில இந்தியத் தலைவரும், சொராபுதீன் கொல்லப்பட்டபோது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவருமான அமித் ஷா என்பதை அறிவோம்.

மிகவும் நேர்மையானவர் என அறியப்பட்டிருந்த நீதிபதி லோயா அந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்ததும், அப்படி இறப்பதற்கு முன் அந்த வழக்கில் அமித் ஷாவுக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தால் அவருக்கு 100 கோடி ரூபாய் அளிப்பதாகக் கூறப்பட்டு அவர் அதை மறுத்ததையும் இன்று அவரது குடும்பம் வெளிப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்ல, அடுத்து அந்த வழக்கை விசாரிக்க அமர்த்தப்பட்ட நீதிபதி எதிர்பார்த்தது போல அமித் ஷாவுக்குக் “க்ளீன் சிட்” கொடுத்ததும் இன்று மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்தான் இந்த மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரும் இந்த வரலாறு காணாத பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர்.

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து முன்வைக்கப்படும் இந்த ஐயம் குறித்து ஒரு முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன் வந்துள்ளது. அது இன்று விசாரணைக்கு வருகிறது. அதே நாளன்று இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. தவிரவும் நீதியரசர் ரஞ்சன் கோகோய் இந்தச் சந்திப்பு முன்வைக்கும் பிரச்சினைகளில் அதுவும் ஒன்று என்பதையும் வெளிப்படுத்தி விட்டார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வரும் அதே நாளில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுவதிலிருந்து அதுவே இன்றைய சந்திப்பின் முக்கியமான பின்னணியாக உள்ளது என்பதும் உறுதியாகிறது. தற்போதைய தலைமை நீதிபதியின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல ஆணைகள் தேச நலனுக்கு உகந்தவையாக இல்லை எனவும், தேச நலனைப் பாதிக்கும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தவையாக அவை உள்ளன எனவும், இதை அவரது கவனத்திற்குக் கொண்டுவந்து நிலமையைச் சீராக்கும் முயற்சியில் தாங்கள் தோல்வியுற்றதாகவும், எதிர் காலத்தில் அறிவார்ந்த பெரியோர்கள் நாங்கள் எங்கள் ஆன்மாவை விற்று விட்டதாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இன்று வழக்கத்தை மீறிய இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த நேர்ந்ததாகவும் நீதியரசர் செல்மேஷ்வர் கூறியுள்ளார்.

மிகப் பெரிய அளவில் இந்தியா முழுவதும் கவனத்துகுரிய நிகழ்வாக இன்று இது ஆகியுள்ளது. நீதித் துறையின் மனச்சாட்சியாக இன்று இந்த மரியாதைக்குரிய நீதியரசர்கள் வெளிப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி அரசு, வேறு எந்த அரசும் சந்தித்திராத ஒரு பிரச்சினையை இன்று சந்தித்துள்ளது. மோடி அவசர அவசரமாக சட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமைக் கணக்காயரைச் சந்திக்க ஓடிஉள்ளார்.

ஒரு ஜனநாயகத்தின் இறுதி நம்பிக்கை அரசியல் சட்டமும், அந்த அரசியல் சட்டம் எனும் உரை கல்லில் அரசின் நடவடிக்கைகளை உரைத்து நீதி வழங்கும் நீதித்துறையும்தான். இந்த அரசு இன்றைய அரசியல் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத அரசு என்பதை அறிவோம். நீதித்துறையையும் தனது ஊது குழலாக அது மாற்ற முனையும் போக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. ஜனநாயகத்தில் அக்கறை உள்ள யாரும் அதை ஏற்க இயலாது.

கொலை, ஊழல் முதலான குற்றச்சாட்டுகளைச் சுமையாய் ஏந்தியவர்கள் ஆளுகையிலும், ஆளும் கட்சியிலும் பொறுப்புக்கு வருவதன் ஆகத் தீய விளைவுகளை இன்று நாம் சந்தித்துக் கொண்டுள்ளோம்.

இது குறித்து எழுப்பப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கைக் குரல்தான் இன்று நடந்தேறியுள்ள இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு. பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் எனும் கூற்றைப் பொய்யாக்கிய இந்த நான்கு நீதியரசர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகின்றன.

-அ.மார்க்ஸ்
(தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர்; மனித உரிமைப்போராளி)

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்