4 காலில் தவழ்ந்து வந்து பதவி வாங்கியதை எடப்பாடி மறந்துட்டார்… உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் – டிடிவி தினகரன்

0
424

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுக-வையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துள்ளார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “சுயேட்சையாக தேர்தலில் நின்றால் தனித் தனிச் சின்னங்கள் ஒதுக்கப்படும். அது தேவையில்லை என்றுதான் இடைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. மேலும், இடைத் தேர்தல்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிதான் எப்போதும் வெற்றி பெறும். எனவே, அந்த வெற்றியைக் கணக்கில் கொண்டு அதிமுக-வினரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகின்றனர். இவர்களது ஆட்டம் ஆட்சி இருக்கும் வரைதான். மேலே இருப்பவன் கைவிட்டால் இவர்கள் திரும்பவும் தலை தூக்கவே முடியாது. 

எடப்பாடி பழனிசாமி, எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதையெல்லாம் மறந்துவிட்டார். 4 கால்களில் குழந்தை போல தவழ்ந்து வந்து  பதவி வாங்கியதை அவர் மறந்துவிட்டார். இப்போது அதிகாரம் இருக்கிற திமிரில் பேசுகிறார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த துரோகிகளை வீழ்த்தி, வெற்றி பெறுவதுதான் எங்களின் குறிக்கோள். 

உள்ளாட்சித்  தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடுவோம்,” எனப் பேசினார். 

மேலும் அவர், “அமமுக ஒரு கம்பெனி என்று விமர்சிக்கிறார் எடப்பாடி. அது ஒரு கட்சியே இல்லை, அதில் தினகரன் மட்டும்தான் உள்ளார் என்கிறார். பின்னர், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் அனைத்து அமமுக நிர்வாகிகளும் அதிமுக-வில் இணைந்து வருகிறார்கள் என்கிறார். அவரின் கருத்தே முன்னுக்குப் பின் முரணுடையதாக இருக்கிறது,” என்றார். 

 அமமுக கட்சியைப் பதிவு செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். கட்சிப் பதிவு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரே சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்த காரணத்தினால் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமென கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னம் கிடைக்காவிட்டாலும் அமமுக போட்டியிடும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்பு 24 ஆம் தேதி முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற திட்டமிட்டுள்ளோம் என்றார். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here