கடந்த 4 நிதியாண்டுகளில், எம்.பி.க்களுக்கு ஊதியம், சலுகையாக ரூ.1997 கோடி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலகத்திடம் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கௌட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரங்களை கோரியிருந்தார். அதற்கு மக்களவை செயலகம் அளித்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மக்களவையில் மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 2 பேர் நியமன எம்.பி.க்கள் ஆவர். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 2014-15ஆம் நிதியாண்டு முதல் 4 நிதியாண்டுகளில் ஊதியம், சலுகையாக ரூ.1,554 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15ஆம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா ரூ.71.29 லட்சம் ஊதியம், சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.443 கோடிக்கும் கூடுதலாக ஊதியம், சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களவை எம்.பி.க்கும் தலா ரூ.44.33 லட்சம் ஊதியமாகவும், சலுகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு அவைகளின் எம்.பி.க்களுக்கும் மொத்தம் ரூ.1997 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, எம்.பி.க்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகள் அளிக்கப்படுவதற்கு ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் ஜெகதீஷ் சோகர் கூறுகையில், எம்.பி.க்களுக்கு ஊதியம், சலுகை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால், அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது; எம்.பி.க்களின் ஊதியத்தை 10 மடங்கு அதிகரிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும், போக்குவரத்து, வீட்டு வாடகை, வாகனம், உணவு, மருத்துவம், விமான பயணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு சலுகைகள் அளிக்கப்படக் கூடாது என்றார்.

Courtesy : dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here