அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி.

பிரபல நிறுவனம் (IIFL Wealth) 2021-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 10வது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த பட்டியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள கவுதம் அதானி குடும்பம் ரூ.5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கவுதம் அதானி குடும்பம் தினசரி ரூ.1002 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக IIFL நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் ஜோங் ஷன்ஷானை, அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கடந்தாண்டு ஒப்பிடுகையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9% மட்டுமே வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில இருக்கும் கவுதம் அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 261% உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் 67% உயர்ந்து ரூ.2.36 லட்சம் கோடி மதிப்புடன் சிவ் நாடார் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அதானியின் அசுர வளர்ச்சி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here