அடுத்த ஆண்டு (2020) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 24ஆம்  தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலிருந்தும் சிறந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் இதில் 33 வகையான பந்தயங்களில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதற்கான செலவுகள் கிட்டத்தட்ட ரூ.1¾ லட்சம் கோடி என்று ஜப்பான் அரசாங்கம் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்திய மதிப்பில்ரூ.1,700 முதல்ரூ.2 லட்சம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த டிக்கெட்டின் விலை ரூ.43 லட்சமாகும். கோலாகலமான தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் 9 நாட்கள் நடக்கும் தடகள போட்டிகளை முழுமையாக பார்க்க இந்த டிக்கெட் வகைசெய்யும்.  மேலும் சொகுசு இருக்கை வசதிஉணவு, உற்சாக பானங்களும் இந்த டிக்கெட்டில் அடங்கும். ஒலிம்பிக் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி காணப்படுவதால் ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதை கூடுதல் தொகைக்கு மறு விற்பனை செய்யவாய்ப்புள்ளது.

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 78 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. இதில் 70 முதல் 80 சதவீத டிக்கெட்டுகள் ஜப்பான் நாட்டு மக்களுக்கு விற்கப்படும். மீதமுள்ள டிக்கெட்டுகள் வெளிநாட்டவர்களுக்கும், ஸ்பான்சர் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். டிக்கெட் மூலம் மொத்தம் ரூ.5,750 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.’ என்றனர்.

ஒலிம்பிக் போட்டியையொட்டி பிரபலமான ஓட்டங்களில் வாடகை கட்டணம் 3-4 மடங்கு எகிறியுள்ளன. சில ஓட்டல்கள் கட்டணத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவை ரத்து செய்வதாக புகார்கள் 
எழும்பியுள்ளது. பெரும்பாலான 3 நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஒலிம்பிக் நெருங்கும் சமயத்தில் இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here