மோடி மற்றும் அமித் ஷா 300 தீவிரவாதிகள் பலியானதாக கூறினார்களா? இந்திய ஊடகங்கள்தான் அவ்வாறு செய்தி வெளியிட்டன என்று மத்திய அமைச்சர் எஸ் எஸ் அலுவாலியா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300 தீவிரவாதிகளுக்கும் குறையாமல் இறந்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்தியை மத்திய அமைச்சர் எஸ் எஸ்அலுவாலியா மறுத்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி பட்டறையை, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை இந்திய விமானப்படையின் விமானங்கள் தகர்த்து எறிந்தன. இத்தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி உட்பட 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி பரவியது. தீவிரவாதிகள் தாக்கப்பட்டதை உறுதி செய்த இந்திய அரசாங்கம், எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பலியான முக்கியத் தலைவர்கள் யார் என்கிற விவரத்தை இதுவரையில் வெளியிடவில்லை.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பாலாகோட் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்ற தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் அவர் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் அவர் பேசியது தெரியவந்துள்ளது.

அப்போது மத்திய அமைச்சர் பேசிய விவரம் வருமாறு:

”எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல.

இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஆனால் அக்கூட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

நான் கேட்கிறேன், பிரதமர் மோடியோ, அல்லது எந்த அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்களுடைய கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலாகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?

பாலாகோட் தாக்குதலின் நோக்கம், தேவைப்பட்டால் பாகிஸ்தானின் கொல்லைப்புறத்திற்கே சென்று தாக்கி அழிக்க முடியும் என்ற செய்தியை அனுப்புவதற்குத்தானே தவிர, எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்கானதல்ல. அப்படி யாரையும் கொல்லவும் இல்லை.”

இவ்வாறு அலுவாலியா பேசிய வீடியோவை வெளியிட்ட சிபிஐ (எம்), உடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது

”அப்படியெனில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம் தகர்த்ததாக தெரிவித்திலிருந்து பின்வாங்குகிறதா அரசு?” என்ற கேள்வியையும் அதில் எழுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அலுவாலியா, “எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். எங்காவது 300 தீவிரவாதிகள் இறந்தார்கள் என்று மத்திய அமைச்சர்களோ, அரசு செய்தி தொடர்பாளர்களோ கூறியிருக்கிறோமா? ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு அரசு எப்படிப் பொறுப்பேற்க முடியும்?” என்று தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதலில், நான்கு பள்ளங்களும், ஒரு பாகிஸ்தானியருக்கு காயம் ஏற்பட்டதைத் தவிர, யாரும் இறக்கவில்லை என்று அல்ஜசீரா, பிபிசி, ராய்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here