30 வருடங்களாக குழந்தை விற்பனையில் முன்னாள் செவிலியர்: ஆடியோவில் திடுக்கிடும் தகவல்கள்

0
134


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 30 வருடங்களாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் செவிலியரின் ஆடியோவில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகியுள்ளன.

அரசு மருத்துவமனை செவிலியராக இருந்த அமுதா, குழந்தை விற்பனையைத் தொழிலாக மாற்றிக் கொண்டு, அதில் கிடைக்கும் அதிக வருமானத்தால், தனது அரசுப் பணியையே விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்துள்ளது அந்த ஆடியோவில் தெரிய வந்துள்ளது.

அமுதாவும், குழந்தைத் தேவைப்படும் நபரும் பேசும் ஆடியோ ஊடகங்களில் இன்று வைரலாகி வருகிறது.

அதில் அமுதா கூறியிருப்பதாவது, நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி, குழந்தைகளை இல்லாதவர்களுக்கு விற்று வருகிறேன். இதற்காகவே எனது செவிலியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். குழந்தை வேண்டும் என்றால் முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பெண் குழந்தையாக இருந்தால் ரூ.3 லட்சமும், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.4 லட்சமும் கொடுக்க வேண்டும். பிறந்த சான்றிதழுடன் வேண்டும் என்றால் கூடுதலா ரூ.70 ஆயிரம்  கொடுக்க வேண்டும் என்று அவர் பெருந்தன்மையோடு பேசுவது பதிவாகியுள்ளது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கும் ராசிபுரம் மகளிர் காவல்துறையினர், ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விற்பனை செய்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்படும் குழந்தைகளா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் குழந்தைகளா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தையின் எடை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தையின் விலையை அமுதா நிர்ணயித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

dinamani.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here