ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் சுமார் 3 கோடி பயனாளர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் இந்த ஹேக்கிங் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டது

9 கோடி பயனாளர்களின் கணக்குகளை, ஹேக் செய்துவிடுவார்கள் என்று முன்னெச்செரிக்கையுடன் ஃபேஸ்புக் நிற்வனம் லாக் அவுட் செய்தது என்று அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுமார் 3 கோடி கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தற்போது அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது. 

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஒரு புதிய பக்-ஐ ஹேக்கர்கள் உருவாக்கியதன் மூலம், 1.5 கோடி பயனாளர்களின் பெயர், போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை திருடியுள்ளனர். இதுவல்லாமல், 1.4 கோடி பயனாளர்களின் கணக்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்து வரும் இடம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளது. 

ஃபேஸ்புக் சம்பந்தப்பட்டுள்ள இந்த விவகாரம் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுடன் பிரச்னையை சரி செய்ய ஃபேஸ்புக் முயன்று வருகிறது. புலனாய்வு அமைப்புகள், ஃபேஸ்புக் நிறுவனத்திடம், யார் இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டது என்று தெரிந்தாலும சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. 

ஹேக்கர்களின் நோக்கம் என்னவென்பது குறித்தும் தெளிவு இல்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. 

ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, பல ஆப்களில் லாக்-இன் செய்ய முடியும். அப்படி செய்யும் போது, இந்த ஹேக் நடந்துள்ளதா என்ற கோணத்திலும், இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மெஸெஞ்சர் போன்ற தளங்கள், இந்த ஹேக்கால் பாதிப்பு அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், அதன் கூகுள் ப்ளஸ் தளத்திலிருந்து 5 லட்சம் கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அதனால் கூகுள் ப்ளஸ் தளம் விரைவில் மூடப்படும் என்றும் அறிவித்தது .

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )