ஒடிசா மாநிலத்தில் தனது சொந்த மகனை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் செல்போன், உடைகள், மதுபாட்டில்களை வாங்கிய கொடூர மனம் படைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் அவர் தனது 11 வயது மகனை, ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஓட்டுநரான சோம்நாத் சேத்தி என்பவரிடம் 25,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

அதில் 2000 ரூபாய் மதிப்பில் ஒரு செல்போனும், 1,500 ரூபாய் மதிப்பில் தனது ஏழு வயது மகளுக்கு வெள்ளிக் கொலுசும், தனது மனைவிக்கு புடவை ஒன்றும், மீதமுள்ள பணத்தில் மதுபாட்டில்களும் வாங்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் பலராம் முகியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய பத்ரக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனூப் சஹூ, ”குழந்தையை விற்க பல்ராம் முகிக்கு அவரது உறவினர் பாலியா மற்றும் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளனர்.” என்றார்.

மேலும் இது குறித்து பேசிய பத்ரக் நகர காவல் ஆய்வாளர் மனோஜ் ரவுத், ”சோம்நாத் சேத்தி என்பவர் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஓட்டுநர். 2012இல் அவரது 24 வயது மகன் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவி உடல்நலமின்றி காணப்படுகிறார். இதனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் அவர் இந்த பையனை விலைக்கு வாங்கியுள்ளார்” என்றார். இந்த வயதான தம்பதியினரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: “நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்