காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதாகவும் இதனால் உலக அளவில் கடல் மட்டத்தில் அளவு உயரவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் சென்னை, மும்பை, சூரத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் அந்தக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக பனிக்கட்டிகள் உருகுவதாகவும், இதனால் 2100களில் 1 மீட்டருக்கும் அதிகமாக கடல் மட்டம் உயரும் என்றும் இதனால் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.

கடல் மட்ட உயர்வால் உலகளவில் 45 நகரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள குழு, இந்தியாவில் சென்னை, மும்பை, சூரத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 50 செமீ கடல் மட்டம் உயர்ந்தாலே இந்தியாவின் 4 நகரங்கள் உள்ளிட்ட 45 கடற்பகுதி நகரங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்பெல்லாம் கடல் மட்ட உயர்வு தொடர்பான பாதிப்புகள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதாவது நடக்கும் ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் அடிக்கடி பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்,இது தாழ்வான நகரங்களுக்கும், சிறிய தீவுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிட்டத்தட்ட 7000 ஆய்வுக்கட்டுரைகளை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ள ஆய்வுக்குழு, பனிக்கட்டி வேகமாக உருகி வருவதால் நாம் நினைப்பதை விடவும் வேகமாக கடல் மட்டம் உயர்கிறது.  உலக வெப்பமயமாதல் 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் 30-60 செமீ வரை கடல் மட்டம் உயரும் என தெரிவித்துள்ளது.

பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தால் புயல் பாதிப்பு, பருவநிலை மாறி மழை அதிகமாக பெய்யும், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடம் பாதிக்கும், கடற்கரை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும், வெப்பக்காற்று அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here