ezgif.com-video-to-gif
தமிழ் சினிமாவின் வசூலையும், வெற்றியையும் தீர்மானிப்பது சிக்கலானது. முதலாவதாக எந்தப் படத்தின் பட்ஜெட்டும் உண்மையில்லை. தயாரிப்பாளர் தரும் பட்ஜெட், அவரது சூழ்நிலைக்கேற்ப மிகைப்படுத்தப்பட்டதாக அல்லது குறைவாக மதிப்பிட்டதாக இருக்கும்.

உதாரணமாக 2.0 படத்தின் பட்ஜெட் 400 – 450 கோடிகள் இருக்கலாம் என்றார் ஷங்கர். 550 கோடிகள் என்றார் ரஜினி. தயாரிப்பாளர் இன்றுவரை பட்ஜெட் விஷயத்தில் மௌனம் காக்கிறார். இதில் எதை வைத்து படத்தின் லாபத்தை தீர்மானிப்பது?

இரண்டாவது, படத்தின் வசூல். தயாரிப்பாளர் முதல் திரையரங்கு உரிமையாளர்கள்வரை யாரும் முறையான வசூலை சொல்வதில்லை. அரசுக்கு அவர்கள் வசதிக்கேற்ப ஒரு கணக்கு காட்டப்படுகிறது. 2.0 படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிய அபிராமி ராமநாதன், எனக்கு லாபம் கிடைத்தது, மற்ற ஏரியாக்களில் லாபமா இல்லையா என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார். சரி, எவ்வளவு லாபம்? பதில் ஒரு புன்னகை மட்டுமே.

சர்கார், 2.0 போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகளவில் வசூலிக்கப்படுகின்றன. 2.0 படத்திற்கு 3டி கண்ணாடிக்கு என தனியாக பணம் வசூலிக்கப்பட்டது. இதற்கெல்லாம் எந்த கணக்கும் இல்லை.

அதிகம் வசூலித்த படம் அனைவருக்கும் லாபம் தருமா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் டிஸ்ட்ரிபுயூஷன் அடிப்படையில் படங்கள் திரையிடப்படுகின்றன. டிக்கெட் கட்டணத்தில் தயாரிப்பாளருக்கு இவ்வளவு, திரையரங்குகளுக்கு இவ்வளவு. எந்த சிக்கலும் இல்லை. ஆனால், தனி திரையரங்குகள் என வரும்போது பல லட்சங்கள் டெபாசிட்டாக திரையரங்குகள் தயாரிப்பாளருக்கு தர வேண்டும். அத்துடன் டிக்கெட் கட்டணத்தில் தயாரிப்பாளருக்கு இவ்வளவு, திரையரங்குக்கு இவ்வளவு என பிரித்துக் கொள்வார்கள். சர்கார் படத்தின் தயாரிப்பு தரப்பு தனித் திரையரங்குகளிடம் டெபாசிட்டாக பல லட்சங்கள் வாங்கியதுடன் டிக்கெட் கட்டணத்தில் 80 – 90 சதவீதத்தை எடுத்துக் கொண்டது. இதனால், சர்கார் அதிகம் வசூலித்தும் பிரேக் ஈவனுக்கே பல திரையரங்குகள் திண்டாடின. 2.0 க்கும் இது பொருந்தும்.

இந்த நடைமுறை சிக்கல்களை கடந்து தயாரித்த பட்டியல் இது. ஏற்கனவே சொன்னது போல் துல்லியமானதில்லை. தமிழக அளவிலான வசூலை வைத்து தயாரிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றிருக்கும் படங்களில் பல நஷ்டத்தை தந்தவை.

8. இரும்புத்திரை (30 கோடிகள்)

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை தமிழகத்தில் 30 கோடிகள் வசூலித்தது. விஷாலுக்கு தயாரிப்பாளராக லாபத்தை தந்த படம் இது. ஆந்திரா, தெலுங்கானாவிலும் படம் அதிகம் வசூலித்தது.

7. செக்கச் சிவந்த வானம் (40 கோடிகள்)

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானத்துக்காக வழக்கமாக வாங்குவதில் பாதி சம்பளத்தையே முன்னணி நட்சத்திரங்கள் பெற்றுக் கொண்டனர். ஆனால், படத்தின் செலவு மிக அதிகம். உணவு, தங்குமிடத்துக்கு மணிரத்னம் அள்ளி இறைத்ததில் படப்பிடிப்பு செலவு அதிகமானது. சுமார் 40 கோடிகள் வசூலித்த படம் அனைவருக்கும் லாபம் தந்தது. குறைவான லாபம் மணிரத்னத்துக்கு. கடைசியாக வெளிவந்த படங்கள் கடன்களில் மூழ்கடித்த நிலையில் இந்தப் படம் வெற்றி பெற்றதே மணிரத்னத்துக்கு பெரிய லாபம்தான்.

6. சீமராஜா (45-50 கோடிகள்)

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான சீமராஜா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் முந்தைய இரு படங்கள் வெற்றி பெற்றது பிரதான காரணம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் தமிழகத்தில் சுமார் 45 – 50 கோடிகளே வNலித்தது. தயாரிப்பாளர், திரையிட்டவர் என அனைத்துத் தரப்பினருக்கும் நஷ்டத்தை தந்தது. மாநகரங்களில் உள்ள திரையரங்குகள் இந்த நெருக்கடியிலும் பிழைத்துக் கொண்டன.தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏறக்குறைய 15 கோடிகள்.

5. கடைக்குட்டி சிங்கம் (50 கோடிகள்)

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் நான்காவது இடத்தில் உள்ளது. சுமார் 50 கோடிகளை தமிழகத்தில் இப்படம் வசூலித்தது. கிட்டத்தட்ட ஒரேயளவு வசூலித்த சீமராஜா, கடைக்குட்டி சிங்கத்தில் ஒன்று தோல்வியும், இன்னொன்று வெற்றியும் பெற காரணம், பட்ஜெட். சீமராஜா பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்ஜெட்டில் கடைக்குட்டி சிங்கம் எடுக்கப்பட்டது. படம் அனைவருக்கும் லாபம்.

4. தானா சேர்ந்த கூட்டம் (60-65 கோடிகள்)

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்த இந்தப் படம் 60 – 65 கோடிகளை தமிழகத்தில் வசூலித்தது. படம் வெற்றி என்று சூர்யா இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்தார். விநியோகஸ்தர் தரப்போ, படம் நஷ்டம் என்று போர்க்கொடி உயர்த்தியது. படத்தை வெளியிட்ட பரதன் பிலிம்ஸும் நஷ்டத்தை ஒப்புக் கொண்டது. 55 கோடியில் படத்தை தயாரித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

3. காலா (70 கோடிகள்)

காலா தமிழகத்தில் 65 முதல் 70 கோடிகள்வரை வசூலித்தது. படத்தின் பட்ஜெட், வியாபாரம் என்று வருகையில் இது குறைவான தொகை. விநியோகஸ்தர்களுக்கு 40 கோடிகள் அளவுக்கு தனுஷ் பணத்தை திருப்பித்தர வேண்டியிருந்தது. காலா எங்களுக்கு லாபம் என்று தனுஷின் வுண்டர்பார் அறிவித்தது. எனினும் விநியோகஸ்தர்கள், திரையரங்குகளுக்கு காலா வசூல் மகிழ்ச்சியை தரவில்லை.

2. சர்கார் (120 கோடிகள்)

மெர்சல் 60 கோடி பிசினஸ் ஆனதால் சர்கார் படத்தை இன்னும் அதிக தொகைக்கு விற்பனை செய்தனர். சுமார் 75 கோடிகள். படம் தமிழகத்தில் சுமாராக 120 கோடிகளை வசூலித்தது. படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் திரையிட்ட சென்னை, கோவையில் படம் அதிக லாபத்தை தந்தது. வழக்கம்போல் தனி திரையரங்குகள் தள்ளாடின. யாருக்கும் நஷ்டமில்லை போலவே அதிக லாபமும் இல்லை.

1. 2.0 (125 கோடிகள்)

நியாயமாக சர்காரைவிட 2.0 படத்தின் தமிழக வசூல் குறைவு. 3டி கண்ணாடிக்கு என திரையரங்குகள் வாங்கிய அதிகபடி 40 ரூபாய் இந்த முதலிடத்தை 2.0 க்கு தந்திருக்கிறது. வெளிநாடுகள், இந்தி, ஆந்திரா, தெலுங்கானாவில் லாபத்தை தந்த 2.0 தமிழ்நாடு, கேரளாவில் பலருக்கு நஷ்டத்தை தந்தது. இதிலும் டிஸ்ட்ரிபுயூஷனில் படத்தை வெளியிட்டவர்கள் பெரிய லாபத்தை அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here