ஐசிசி 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து நேற்று(திங்கள்கிழமை) அறிவித்தது.

ஐசிசி 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தானா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் சிறந்த ஒருநாள் வீராங்கனைக்கான ஐசிசி விருதையும் ஸ்மிருதி மந்தானா பெறுகிறார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜுலைன் கோஸ்வாமிக்கு பிறகு ஐசிசி விருதை வெல்லும் 2ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர் ஸ்மிருதி மந்தானா 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 66.90 சராசரியுடன் 669 ரன்கள் குவித்துள்ளார்.

25 டி20 போட்டிகளில் 130.67 ஸ்டிரைக் ரேட் உடன் 622 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் மட்டும் ஆடி 125.35 ஸ்டிரைக் ரேட் உடன் 178 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 4 ஆவது இடத்திலும், டி20 தரவரிசையில் 10 ஆவது இடத்திலும் உள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டிவிட்டர் வீடியோ பதிவில் ஸ்மிருதி மந்தானா கூறியதாவது ”ஒரு பேட்ஸ் மேனாக ரன்கள் குவித்து அதன்மூலம் அணியை வெற்றி பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாக இருக்கும். அவ்வகையில், இதுபோன்ற செயல்களுக்காக அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கும்போது அவை மிகச்சிறப்பானதாக அமைகிறது. இது மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்தது மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அதுபோன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளிலும் எனது ஆட்டம் திருப்திகரமாக அமைந்தது.

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் நான் அதிகளவில் ரன்கள் குவிப்பதில்லை என்ற விமர்சனமும் என்மீது உண்டு. எனவே அதை சரிசெய்துகொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதுதான் என்னை சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளது. அதேபோன்று டி20 உலகக் கோப்பையின் முதல் 4 ஆட்டங்களும் என்னால் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்